2014-03-29 15:39:31

நாம் மனமாற கடவுள் விடுக்கும் அழைப்பை வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,29,2014. நாம் மனமாற்றம் அடைவதற்கு கடவுள் விடுக்கும் அழைப்பை தவக்காலத்தில் மட்டுமல்லாமல் வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ நாம் உறுதி எடுக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி மாலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற மன்னிப்பு விழா திருவழிபாட்டில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய பண்புகள் குறித்து பேசினார்.
கடவுள் வழியில் படைக்கப்பட்ட புதிய வாழ்வை அணிந்து கொள்வது, கடவுளின் அன்பில் வாழ்ந்து அதைப் பகிர்ந்து கொள்வது ஆகிய இரு முக்கிய பண்புகள் குறித்து தனது மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, திருமுழுக்கில் நமக்குக் கிடைக்கும் கிறிஸ்துவில் புதுவாழ்வு, உலகை நாம் புதுவிதமாய்ப் பார்க்க உதவுகின்றது என்று கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வின் இரண்டாவது முக்கிய பண்பு, கடவுளின் நித்திய அன்பில் வாழ்வதாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களது வழியை இழந்தவர்கள், தமக்குப் பிரமாணிக்கமாய் வாழ்பவர்கள் என, கடவுள் தமது அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் காத்திருப்பதில் சோர்வுறாதவர் என்றும் கூறினார்.
கடவுளின் அன்பு அடைத்து வைக்கப்படுவது அல்ல, இது இயல்பிலேயே பரந்து விரிந்த பலனுள்ள அன்பு, இது எப்போதும் புதிய அன்பை உருவாக்குகிறது என்றும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.