2014-03-28 16:35:50

திருத்தந்தை : ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளின் கருணை வெளிப்படுகின்றது


மார்ச்,28,2014. ஒப்புரவு அருளடையாளம், தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் அல்ல, மாறாக அது வானகத்தந்தையின் மன்னிப்பையும் கருணையையும் அனுபவிப்பதாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நிறுவனம் நடத்திய பயிற்சியில் பங்குபெற்ற ஏறக்குறைய 600 பேரை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் மையமாகச் செயல்படுபவர் தூய ஆவியானவர் என்பதால், இவ்வருள் அடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள் தூய ஆவியின் மனிதர்கள் என்றும் கூறினார்.
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வரும் விசுவாசிகளை இவர்கள், நீதிபதியாக இல்லாமல், ஏன், சாதாரண மனிதராகக்கூட இல்லாமல், கடவுளின் அன்போடு வரவேற்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஒப்புரவு அருளடையாளத்தின் இரு கூறுகள் பற்றி விளக்கிய திருத்தந்தை, ஒப்புரவு உயிர்த்த ஆண்டவரின் புதிய வாழ்வை வழங்கி திருமுழுக்கு அருளைப் புதுப்பிக்கின்றது என்பதால், இதனை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள் இதனைத் தாராளமனத்துடன் பிறருக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு விசுவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு மற்றும் மீட்பின் அருளடையாளத்தை வழங்குவதற்கு ஒவ்வொரு மறைமாவட்டமும் பங்குத்தளங்களும் மிகுந்த அக்கறை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.
விசுவாசிகள் ஒவ்வொரு பங்கிலும் இந்த அருளடையாளத்தைப் பெறுவதற்குரிய நேரத்தை அறிந்திருக்க வழிவகை செய்யப்படுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் பரிந்துரைத்தார்.
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் புதிய குருக்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் குறித்து பயிற்சி அளித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.