2014-03-28 16:36:29

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட கிறிஸ்தவ ஆர்வலர்கள் வேண்டுகோள்


மார்ச்,28,2014. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டு, அநீதியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுமாறும், தடுப்புக்காவலில் இருப்போரின் மனித மற்றும் சட்ட உரிமைகள் காக்கப்படுமாறும் அந்நாட்டின் கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் போதும், அதற்குப் பின்னரும் காணாமற்போயுள்ளவர்களின் உறவினர்கள் உட்பட, பல கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் தலைநகர் கொழும்புவில் இவ்வாரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்து ஊர்வலம் மேற்கொண்டனர்.
சனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றையும் இந்த ஊர்வலத்தினர் நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்கள் அருள்பணியாளர்கள் Ashok Stephen, Marimuttu Sathivil ஆகிய இருவரும் நீதி அமைச்சரைச் சந்தித்து இம்மனுவைக் கொடுத்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.