2014-03-27 16:49:54

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் 3 நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்கள்


மார்ச்,27,2014. மேமாதம் 24ம் தேதி முதல், 26ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் 3 நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை வத்திக்கான் இவ்வியாழனன்று வெளியிட்டது.
மே 24, சனிக்கிழமை காலை 8.15க்கு மணிக்கு, உரோம் நகர் லியோனார்தோ தாவின்சி விமான நிலையத்திலிருந்து துவங்கும் திருத்தந்தையின் பயணம், மே 26, திங்களன்று இரவு 11 மணிக்கு, உரோம் நகர் Ciampino விமான நிலையத்தில் முடிவடைகின்றது.
மே 24 மதியம் ஒரு மணி அளவில், ஜோர்டான் நாட்டுத் தலைநகர் அம்மானைச் சென்றடையும் திருத்தந்தை, அந்நாட்டு அரசர், அரசியைச் சந்தித்தபின், அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு உரையாற்றுவார்.
மாலை 4 மணியளவில், அம்மானில் உள்ள ஒரு பன்னாட்டு விளையாட்டுத் திடலில் திருத்தந்தை அவர்கள் திருப்பலியாற்றுவார்.
மாலை 7 மணிக்கு, யோர்தான் நதிக்கரையில் இயேசு திருமுழுக்கு பெற்ற புனிதத் தலத்திற்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு, மாற்றுத் திறனாளிகளையும், புலம் பெயர்ந்தோரையும் சந்திப்பார்.
மார்ச் 25, ஞாயிறன்று காலை, ஹெலிகாப்டர் மூலம் பெத்லகேம் செல்லும் திருத்தந்தை, பாலஸ்தீனிய அரசுத்தலைவரைச் சந்தித்தபின், அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு உரை வழங்குவார்.
காலை 11 மணிக்கு, இயேசுவின் பிறப்பிடமான பெத்லகேமில் தித்தந்தை ஆற்றும் திருப்பலி அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக அமையும்.
பிற்பகல், Dheisheh என்ற முகாமில் தங்கியுள்ள அகதிகளையும், குழந்தைகளையும் சந்திக்கும் திருத்தந்தை, மாலை 4.30 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் இஸ்ரேல் நாட்டின் Tel Aviv விமான த்லாத்தைச் சென்றடைவார்.
அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம், மாலை 5.45 மணிக்கு எருசலேம் சென்றடையும் திருத்தந்தை, கான்ஸ்டாண்டிநோபிள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பார்.
மாலை 7 மணிக்கு, எருசலேம் புனித கல்லறை பசிலிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புரையாற்றுவார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடையாளமாக, முதுபெரும் தந்தை முதலாம் Athenagoras அவர்களைச் சந்தித்ததன் 50ம் ஆண்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 26, திங்களன்று காலையில், இஸ்ரேல் அரசுத்தலைவர், பிரதமர், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரையும் சந்திக்கும் திருத்தந்தை, மாலையில் கெத்சமனிக்கு அருகே அமைந்துள்ள கோவிலில் அருள் பணியாளர், துறவியர் அனைவரையும் சந்தித்து உரையாற்றுவார்.
மாலை 5.30 மணிக்கு, இயேசுவின் இறுதி இரவுணவு நடைபெற்ற அறையை ஒட்டிய ஓர் அரங்கத்தில் திருத்தந்தை ஆற்றும் திருப்பலி அன்றைய உச்ச நிகழ்வாக அமையும்.
மாலை 8.00 மணியளவில் Tel Aviv விமான நிலையம் சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு வழங்கப்படும் வழியனுப்பு விழாவுக்குப் பிறகு, அங்கிருந்து கிளம்பி, இரவு 11 மணிக்கு உரோம் நகர் Ciampino விமான நிலையம் வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.