2014-03-27 16:47:51

திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவன் வழங்கும் தூண்டுதல்களுக்குச் செவிசாய்த்து வாழ்வது மீட்படையும் வழி


மார்ச்,27,2014. வெளிப்புற நடத்தைகளில் மட்டும் கவனம் செலுத்துவது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்குச் சமம் என்றும், இறைவன் வழங்கும் தூண்டுதல்களுக்குச் செவிசாய்த்து வாழ்வது மீட்படையும் வழி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார்.
மார்ச் 27, இவ்வியாழன் காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட, ஏறத்தாழ 500 பேருக்குத் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இயேசுவின் காலத்தில், மக்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகி, தங்களுடைய கொள்கைகளைக் காப்பதிலேயே கவனம் செலுத்திய ஆதிக்க வர்க்கத்தினர், இறுதியில் இலஞ்சம் போன்ற குற்றங்களிலும் மூழ்கியிருந்தனர் என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும் இறையியலுக்குப் பதிலாக, கடமைகளின் அடிப்படையில் உருவாகும் இறையியலை நம்பி வாழ்வது உண்மையான விடுதலை அளிக்காது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அன்பின் அடிப்படையில் உருவாகும் விடுதலையை நோக்கி இத்தவக்காலத்தில் இறைவன் நம் அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், “மனமாற்றம் பெற்று, நம் திருமுழுக்கை முழுமையாக வாழ்வதற்கு தவக்காலம் என்ற அருள்நிறைந்த காலம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது” என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AsiaNews








All the contents on this site are copyrighted ©.