2014-03-27 16:52:02

திருத்தந்தை அறிவித்துள்ள 'மன்னிப்பு விழா'வில் இந்தியத் திருஅவை முழுமையாக ஈடுபடும் - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்


மார்ச்,27,2014. மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள 'மன்னிப்பு விழா'வில் இந்தியத் திருஅவை முழுமையாக ஈடுபடும் என்று மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
மன்னிப்பு பெறுவதும் தருவதும் நாம் பெறக்கூடிய அற்புதக் கோடைகள் என்றும், இறைவன் இக்கொடைகளை வழங்க எப்போதும் சலிப்பதில்லை என்றும் திருத்தந்தை கூறியுள்ளதைக் கொண்டாட இவ்விழாவின் மூலம் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
மார்ச் 28, வெள்ளி மாலை மும்பை குருத்துவப் பயிற்சி இல்லத்தில் திருப்பலியுடன் இவ்விழா துவங்கும் என்றும், அன்றிரவு மும்பை நகரின் பல்வேறு ஆலயங்கள் திருவிழிப்பு வழிபாட்டுக்காகவும், ஒப்புரவு அருள் சாதனத்திற்காகவும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
வெள்ளி மாலைத் திருப்பலிக்குப் பின்னர், ஏறத்தாழ 25,000 பேர் கொண்ட ஒரு திருப்பயணம் மும்பை சிலுவைத் திடலிலிருந்து கிளம்பி, 25 கிலோமீட்டர்கள் நடந்து, இறுதியில், மலை மரியன்னை பசிலிக்காவில் நிறைவுபெறும் என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.