2014-03-27 16:48:52

இதுவரை, 12 அமெரிக்க அரசுத் தலைவர்கள் 6 திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர்


திருத்தந்தையர்களுக்கும், அமெரிக்க அரசுத் தலைவர்களுக்கும் இடையே வரலாற்றில் நிகழ்ந்துள்ள சந்திப்புக்களில், அரசுத் தலைவர் பாரக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சந்தித்தது, 28வது முறை என்று அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை விடுத்துள்ளது.
முதல் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 1919ம் ஆண்டு சனவரி 4ம் தேதி, அரசுத் தலைவர் Woodrow Wilson அவர்கள், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார். இவ்விருவரும் உலக அமைதிக்கென முயற்சிகள் மேற்கொண்டனர் என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1959ம் ஆண்டு, அரசுத் தலைவர், Dwight Eisenhower அவர்கள் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை, வத்திக்கானில் சந்தித்தார் என்றும், இதுவரை, 12 அமெரிக்க அரசுத் தலைவர்கள் 6 திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
1965ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு முதன்முதலாக மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.
தன் நீண்ட தலைமைப் பணி காலத்தில், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களுக்கும், 5 அமெரிக்க அரசுத் தலைவர்களுக்கும் இடையே, வத்திக்கானிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் 15 சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் அடக்கத் திருப்பலி 2005ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்றபோது, அமெரிக்க அரசுத் தலைவர் George Bush Jr., அவர்களும், முன்னாள் அரசுத் தலைவர்கள் George Bush Sr., Bill Clinton ஆகியோரும் இச்சடங்கில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : USCCB








All the contents on this site are copyrighted ©.