2014-03-26 15:55:50

மார்ச் 29ஆம் தேதி, சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் Earth Hour


மார்ச்,26,2014. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைக்கும் எர்த் அவர் (Earth Hour) பிரச்சாரம், இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
இந்தப் பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடுகள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தேவையற்ற விளக்குகளை, மின்கருவிகளை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அணைத்து வைக்கவேண்டும். உலகில் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சாரங்களிலேயே மிகப் பெரியதாக இது கருதப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது. இரவில் நடத்தினால்தான் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது வெளிப்படையாகத் தெரியும் என்பதால்தான், இந்தப் பிரச்சாரம் இரவில் நடத்தப்படுகிறது. மரபுசாரா எரிசக்தி மூலம் மின் கருவிகளை இயக்க வேண்டும் என்பது, இந்த ஆண்டு பிரச்சாரத்தின் நோக்கம்.
WWF (World Wide Fund for Nature) என்று பொதுவாக அறியப்படும் உலக இயற்கை நிதியம், இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிறது. 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், உலகிலுள்ள 7000க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைக்கும் பிரசாரமாகத் தொடங்கிய இது, இந்த முறை “மாற்று எரிசக்திக்கு மாறுங்கள்” என்ற பிரச்சாரமாக வளர்ந்துள்ளது.
சூரியசக்தி, காற்றாலை, தாவர-உயிர்க்கழிவு எரிசக்தி, நீர்மின் சக்தி உள்ளிட்டவை புதுப்பிக்கத்தக்க அல்லது மாற்று எரிசக்திகள் எனப்படுகின்றன. இவை உலகம் உள்ளவரை உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்திகள். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், மின்சாரப் பயன்பாட்டுக்கான செலவும் குறையும்.
விளக்கை அணைக்கும் இந்த எர்த் அவர் பிரச்சாரம் 2009ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு 58 நகரங்களில், 50 லட்சம் பேர் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். 2012இல் 150 நகரங்களுக்கு இந்தப் பிரச்சாரம் விரிவடைந்தது.
2011இல் குடியரசுத் தலைவர் மாளிகையிலும், நாடு முழுவதும் உள்ள 30 பாரம்பரியச் சின்னங்களிலும் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன. 2010இல் 120 பொது, தனியார் துறைகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.