2014-03-26 15:23:39

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மார்ச் 26,2014. உரோம் நகரில் இப்புதன் காலையில் மழை இலேசாக தூறிக்கொண்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் தூய பேதுரு பேராலய வளாகம், திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பியிருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் 10 மணிக்கு தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கியபோது, மழை முற்றிலுமாக நின்று, சூரியன் தன் கதிர்களைப் பரப்பத் துவக்கியிருந்தது. அருள் அடையாளங்கள் குறித்த தன் மறைபோதகத்தை இவ்வாரத்தில் தொடர்ந்தார் திருத்தந்தை.
அன்பு சகோதர சகோதரிகளே! அருள் அடையாளங்கள் குறித்த நம் மறைபோதகத்தில் இன்று, குருத்துவம் எனும் அருளடையாளம் குறித்து நோக்குவோம். கிறிஸ்தவ வாழ்வை நம்மில் துவக்க உதவும் திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், திருநற்கருணை எனும் அருள் அடையாளங்களில் பெற்ற அழைப்பின்மேல் கட்டப்பட்டதாக இருக்கும் குருத்துவம் மற்றும் திருமணம் எனும் அருளடையாளங்கள், இரு தனிப்பட்ட அழைப்புகளோடு தொடர்புடையவை, மற்றும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும், திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கும் உதவும் இருவழிகள் அவை. ஆயர், குரு, தியோக்கியோன் எனும் மூன்று படிகளை உள்ளடக்கிய குருத்துவம் எனும் அருளடையாளம், மேய்ப்புப்பணிக்கான அருளடையாளம். தன் மந்தையை மேய்க்கும் பொறுப்பை தன் அப்போஸ்தலர்களிடம் ஒப்படைத்தார் இயேசு. ஒரே மேய்ப்பராம் கிறிஸ்துவின் இருப்பை, திருநிலைப்படுத்தப்பட்டோர் எல்லாக் காலத்திலும் உணர்த்துகின்றனர். இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி இவர்கள், பணியாளர்களாக கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்துகின்றனர். அவர்களின் வாழ்வு, திருஅவைக்கான தீராத அன்பு நிறைந்ததாக இருக்கவேண்டும். இந்த திருஅவையின் புனிதத்துவம் மற்றும் தூய்மைப்படுத்தலுக்குத்தான் இயேசு கிறிஸ்து தன்னையே முற்றிலுமாகக் கையளித்தார். திருநிலைப்படுத்தப்பட்டோர் தங்கள் திருநிலைப்பாட்டின் மகிழ்வு மற்றும் அருளை, ஜெபம், ஒறுத்தல் தினசரி திருப்பலி நிறைவேற்றல் ஆகியவை மூலம் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டேயிருக்கவேண்டும். நாம் இன்று திருஅவையின் அனைத்து மேய்ப்பர்களுக்காகவும் செபிப்போம், குறிப்பாக நம் செப உதவி தேவைப்படுபவர்களுக்காக. அதேவேளை, இறைவன் தன் திருஅவைக்கு, தன் இதயத்தைப்போன்ற தாராள மனதுடைய, இரக்கமுடைய மேய்ப்பர்களைத் தரவேண்டும் என வேண்டுவோம்.
இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.