2014-03-26 15:47:59

திருத்தந்தையரும், அமெரிக்க அரசுத் தலைவர்களும் – வத்திக்கான் தகவல்கள்


மார்ச்,26,2014. மார்ச் 27, இவ்வியாழனன்று, அமெரிக்க அரசுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பதையோட்டி, சில தகவல்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்றாலும், அவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர், 2009ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துள்ளார்.
1919ம் ஆண்டு, சனவரி 9ம் தேதி, அமெரிக்க அரசுத் தலைவர் Woodrow Wilson அவர்கள், அப்போதையத் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்த முதல் அமெரிக்க அரசுத் தலைவர் என்றும், அரசுத் தலைவர் ஒபாமா உட்பட, இதுவரை 12 அமெரிக்க அரசுத் தலைவர்கள் திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
1959ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை, அரசுத் தலைவர் Dwight Eisenhower சந்தித்தார். 1963ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைச் சந்தித்த அரசுத்தலைவர் ஜான் கென்னடி அவர்கள், கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்தத் திருத்தந்தை, முத்திப்பேறுபெற்ற 2ம் ஜான்பால் அவர்களது தலைமைப்பணி காலத்தில், வத்திக்கானுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே 1984ம் ஆண்டு உயர்மட்ட தூதரக உறவுகள் நிறுவப்பட்டன.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது நீண்ட தலைமைப்பணி காலத்தில், அமெரிக்க அரசுத் தலைவர்கள், Ronald Regan, George Bush Sr., இருவரும் முறையே இருமுறைகளும், George Bush Jr., அவர்கள் மும்முறையும் வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியேற்புத் திருப்பலியில், அமெரிக்க அரசின் சார்பாக, அந்நாட்டு உதவி அரசுத் தலைவரும் கத்தோலிக்கருமான Joe Biden அவர்கள் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.