2014-03-26 15:54:15

திருக்குடும்பத்துடன் ஒன்றிணைந்தால், நாம் எந்த சவாலையும் சந்திக்க முடியும் - எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal


மார்ச்,26,2014. கிறிஸ்தவக் குடும்பங்கள் இன்று சந்திக்கும் சவால்கள் அதிகம் என்றாலும், நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்துடன் ஒன்றிணைந்தால், நாம் எந்த சவாலையும் சந்திக்க முடியும் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
மார்ச் 25ம் தேதி கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாளன்று, புனித பூமியில் உள்ள நாசரேத்து பசிலிக்காவில் திருப்பலியாற்றிய முதுபெரும் தந்தை Twal அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புனித பூமியில் மட்டுமல்லாது, சுற்றியிருக்கும் சிரியா, ஈராக், எகிப்து ஆகிய நாடுகளிலும், நைஜீரியா, மத்திய ஆப்பரிக்க நாடுகளிலும் தங்கள் மத நம்பிக்கைக்காகத் துன்புறும் உடன்பிறந்தோரை இன்று நினைவில் கொள்வோம் என்று முதுபெரும் தந்தை Twal அவர்கள் விண்ணப்பித்தார்.
அமைதியின் திருத்தூதர், குடும்பங்களின் திருத்தூதர், வறியோரின் சார்பில் வழக்காடுபவர் என்று பலவாறாகப் புகழடைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமிக்கு வருவது நமக்கெல்லாம் அருள் மிகுந்த ஒரு தருணம் என்றும் முதுபெரும் தந்தை Twal அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.