2014-03-26 15:55:28

இலங்கையில் "இன்னும் முடிவுறாத போர்" - புதிய ஆய்வறிக்கை


மார்ச்,26,2014. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சென்றபின்னரும், இன்னும் அந்நாட்டில் இளைஞர்களும், இளம்பெண்களும் தொடர்ந்து வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
தென் ஆப்ரிக்க மனித உரிமைகள் அறக்கட்டளை என்ற நிறுவனத்தின் இயக்குனரான Yasmin Sooka என்பவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கை அண்மையில் வெளியானது.
2009ம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் காட்ட நேரத்தில் இராணுவம் மேற்கொண்ட வன்முறைகளை ஆய்வு செய்யவேண்டும் என்பது குறித்த வாக்கெடுப்பு ஐ.நா.அவையில் இந்த வாரம் நடைபெறவுள்ள இவ்வேளையில், அந்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் இராணுவ அடக்குமுறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பல இளையோர் இன்றும் எவ்விதக் காரணமும் இன்றி இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதும், சித்திரவதைகளுக்கு உள்ளாவதும், குறிப்பாக, இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதும் தொடர்கிறது என்று இவ்வறிக்கை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது.
"இன்னும் முடிவுறாத போர்" (An Unfinished War) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஆண்டு 21 பேர் வன்முறைகளுக்கு உள்ளானதும், கடந்த மாதம் வரை இராணுவம் மேற்கொள்ளும் பல்வேறு சித்திரவதை முயற்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் மறைமுகமாக நடைபெறும் பல்வேறு வன்முறைகளின் ஒரு மிகச் சிறிய பகுதியே தங்கள் ஆய்வு என்பதையும் இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : The Guardian








All the contents on this site are copyrighted ©.