2014-03-26 15:54:50

இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றப் பணிக்குழு கொண்டாடிய பேராயர் ரொமேரோ அவர்களின் மறைவு நாள்


மார்ச்,26,2014. அநீதியின் அராஜகத்திற்குத் தலைபணியாமல், வன்முறையற்ற அகிம்சை வழியில் நீதியை நிலைநாட்டப் போராடிய பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி என்று டில்லி உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Vincent Concessao அவர்கள் கூறினார்.
34 ஆண்டுகளுக்கு முன், மார்ச் 24ம் தேதியன்று, எல் சால்வதோர் நாட்டின், சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் திருப்பலி நேரத்தில் கொல்லப்பட்டதன் ஆண்டு நினைவை டில்லி உயர் மறைமாவட்டம் இத்திங்கள் மாலை கொண்டாடியபோது, முன்னாள் பேராயர் Concessao அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றப் பணிக்குழு, புது டில்லியில் உள்ள எல் சால்வதோர் தூதரகத்துடன் இணைந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக, பேராயர் ரொமேரோ அவர்களின் மறைவு நாளைக் கொண்டாடி வருகிறது.
34 ஆண்டுகளுக்கு முன் பேராயர் ரொமேரோ அவர்கள் துப்பாக்கி குண்டால் கொலை செய்யப்பட அதே நேரத்தில், முன்னாள் பேராயர் Concessao அவர்கள் இத்திங்கள் மாலை தன் மறையுரையை வழங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று இந்திய ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பேராயர் ரொமேரோ அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் மீண்டும் துவக்கிவைத்தார்.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.