2014-03-25 15:40:44

உண்மைச் செய்திகள் வெளிவருவதற்குப் போராடும் ஆர்வலர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஐ.நா


மார்ச்,25,2014. உண்மையான தகவல்களை வெளிக்கொணருவதற்குப் போராடும் ஆர்வலர்களைப் பாதுகாப்பதற்கும், அந்நடவடிக்கையின்போது பாதிக்கப்படுவோருக்கு உதவுவதற்கும் அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டும் என, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் அதிகமாக இடம்பெற்றுவரும் உலகில், அனைத்துலக நீதியையும் சட்டத்தையும் ஊக்குவிப்பதற்கு தனியாள்களுக்கும், குழுக்களுக்கும் இருக்கின்ற உரிமைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார் பான் கி மூன்.
இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட “அனைத்துலக உண்மைக்கான உரிமை” தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறினார் ஐ.நா. பொதுச்செயலர்.
மனித உரிமைகளுக்காகப் போராடிய எல் சால்வதோர் கத்தோலிக்க பேராயர் Óscar Arnulfo Romero அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட மார்ச் 24ம் தேதியை, “அனைத்துலக உண்மைக்கான உரிமை” தினமாக அறிவித்து சிறப்பித்து வருகிறது ஐ.நா. நிறுவனம்.
எல் சால்வதோரில் உள்நாட்டுச் சண்டை இடம்பெற்ற சமயத்தில் சமூகநீதி, அடக்குமுறை, கொலைகள், சித்ரவதைகள், ஏழ்மை ஆகியவற்றுக்கு எதிராக உரக்கக் குரல்கொடுத்த சான் சாலவ்தோர் பேராயர் ரொமெரோ அவர்கள், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் 1980ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டுவரை நடந்த உள்நாட்டுச் சண்டையில் 75 ஆயிரம் பேர் இறந்தனர், எட்டாயிரம் பேர் காணாமற்போயினர் மற்றும் 12 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளாகியுள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.