2014-03-25 15:40:53

இனப்பாகுபாடுகளை விலக்கி நடப்பதற்கு, இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்குக் கற்றுக்கொடுப்பட வேண்டும், பான் கி மூன்


மார்ச்,25,2014. “அட்லாண்டிக் பெருங்கடல் வழியே இடம்பெற்ற அடிமை வணிகத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும்” அனைத்துலக தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனப்பாகுபாடு மற்றும் முற்சார்பு எண்ணங்களின் ஆபத்துக்களைத் விலக்கி நடப்பதற்கு, இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு உலகினர் தங்களை அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்தகால அடிமை வணிகத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நினைவுக்குக்கொணருமாறு அழைப்புவிடுத்த அதேவேளை, மனித வணிகம், கொத்தடிமை, பாலியல்அடிமை, வீடுகளில் அடிமைவேலை போன்ற கடும் மனித உரிமை மீறல்களால் இன்றும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.
அட்லாண்டிக் பெருங்கடல் வழியே 400 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த மனித அடிமை வணிகத்துக்கு ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மனிதர்கள் பலியாகினர். மனித வரலாற்றில் இடம்பெற்ற இருளான அத்தியாயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தின் பயனாக, 1804ம் ஆண்டு ஹெய்ட்டி நாடு முதன்முதலாக விடுதலை அடைந்தது. இந்த 2014ம் ஆண்டு அதன் 210ம் ஆண்டு நிறைவு நினைவுகூரப்படுகின்றது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25ம் தேதி இந்த அனைத்துலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. “அடிமைத்தனத்தின்மீது வெற்றி : ஹெய்ட்டியும் அதற்கப்பாலும்” என்ற தலைப்பில் இவ்வாண்டின் இவ்வுலக தினம் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.