2014-03-25 15:40:31

அமெரிக்கப் பதிப்பகங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன


மார்ச்,25,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பதிப்பகங்களிலும், அந்நாட்டு ஆயர் பேரவையின் தொடர்புத்துறை அலுவலகத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்று வத்திக்கான் பதிப்பகம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரைகளுக்குக் காப்புரிமை வாங்குவதில் அமெரிக்காவில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளதைக் காண முடிகின்றது என்று வத்திக்கான் பதிப்பக இயக்குனர் அருள்பணி ஜூசப்பே கோஸ்தா CNA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்ட்டிமோரில் அண்மையில் நடைபெற்ற மிட் அட்லாண்டிக் கத்தோலிக்கத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அருள்பணி கோஸ்தா, இந்த மாநாட்டில் பல கத்தோலிக்கப் பதிப்பகத்தார் கலந்து கொண்டனர் எனவும், ஏறக்குறைய இருபது பதிப்பகத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினர் எனவும் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய ஒவ்வொரு நூலும், உலகில் ஏறக்குறைய 5 இலட்சம் முதல் 2 கோடிப் பிரதிகள் வரை விற்பனையாகின்றன எனவும் அருள்பணி ஜூசப்பே கோஸ்தா கூறினார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.