2014-03-24 15:20:09

வாரம் ஓர் அலசல் – மன்னிப்பு விழா


மார்ச்,24,2014. RealAudioMP3 அது ஒரு முழு நிலா நாள். உருக்கி ஊற்றிய கண்ணாடி போன்று வானம் “பளிச்” என்று இருந்தது. அங்கும் இங்குமாக வெண் மேகங்கள் மெதுவாக ஊர்வலம் சென்றன. குழந்தையின் சிரிப்பாக ஒவ்வொரு விண்மீனும் வானகத்திற்கு அழகு சேர்த்தன. அந்தப் பக்கமாய் வந்த வானம்பாடி ஒன்று விண்மீன்களைக் கண்டு வியந்தது. விண்மீன்களே, உங்களால் வானமே மின்னுகிறது. நீங்கள் கூட்டங் கூட்டமாகச் சூழ்ந்திருப்பதால் நிலவுக்கே புத்தம் புதிய அழகு சேர்ந்துள்ளது என்று போற்றியது வானம்பாடி. மற்ற பறவைகளும் வானம்பாடி சொல்வதை ஏற்று மகிழ்ச்சியால் பாடின. அளவுக்கு மீறி பாராட்டு கிடைத்தால் மிஞ்சுவது ஆணவம்தான் என்பது விண்மீன்களின் செயல்களில் வெளிப்பட்டன. அவை நிலாவை வம்புக்கு இழுத்தன. நிலாவே, நிலாவே, எங்கள் ஒளியைப் பார்த்தாயா? எங்கள் உயர்வைப் பார்த்தாயா? என்று ஆர்ப்பாட்டம் செய்தன. நிலா அமைதியாகப் பேசியது. படர்ந்த வானம்.. இறைவன் படைத்த இயற்கை.. நம்மை நிலைப்படுத்தும் நிலம்.. வாழ வைக்கும் கதிரவன்.. வெப்பக்கவசமாக விளங்கும் மேகம் போன்றன எல்லாமே, மின்னிச் ஜொலிக்கும் உங்கள் ஒளிக்குக் காரணங்கள். இவற்றை நன்றியோடு நினையுங்கள். நாளைய உலகமும் உங்களை வாழ்த்தும்.. என்று கூறியது நிலா. அப்போது விண்மீன்கள் நிலாவிடம், ஆணவத்தால் அறிவு மழுங்கிப் போனது, உம் அறிவுரையால் அது இன்று மீண்டது என்று சொல்லி மன்னிப்புக் கோரின.
“மன்னிப்புக் கேட்பது துணிவுமிக்க செயல். மன்னிப்பது வலிமைமிக்க செயல். மன்னிப்பு அளித்த பின்னர் பிறரால் ஏற்பட்ட இன்னல்களை மறப்பது மகிழ்ச்சிமிக்க செயல்” என்று சொல்வார்கள். மன்னிப்புப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து அதை தமது வாழ்வில் வெளிப்படுத்திய இயேசு மகான், “மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்” என்று சொன்னார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராக இருந்தபோது ஒரு கொள்கையை உறுதியாகக் கொண்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது. அவர் தன்னிடம் கருணைகேட்டு விண்ணப்பிக்கும் மரணதண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைத்துவிடுவார். இதற்காக அவர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அவற்றை அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு சமயம், போர்முடிந்த போர்க்களம் ஒன்றை ஆபிரகாம் லிங்கன் பார்வையிட்டார். அப்போது, ஒரு போர்வீரர், தனது கழுத்தில் அணிந்திருந்த செயின் லாக்கெட்டை முத்தமிட்டபடி இறந்து கிடந்ததைக் கண்டார். அந்த லாக்கெட்டில் அந்த வீரரின் மனைவி அல்லது காதலியின் படம் இருக்கலாம், அதை அவர்களிடம் சேர்த்துவிடலாம் என நினைத்து அதைப் பார்த்த லிங்கன் அதிர்ந்து போனார். ஏனெனில் அந்த லாக்கெட்டில் லிங்கன் அவர்களின் படம் இருந்தது.
அந்தப் போர்வீரர் பற்றி ஆபிரகாம் லிங்கன் அவர்கள் விசாரித்தபோது ஓர் உண்மை தெரிய வந்தது. மரணதண்டனை பெற்றிருந்த பெருங்குற்றவாளியான அந்தப் போர்வீரர், லிங்கன் அவர்களின் மன்னிப்பைப் பெற்று சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர். போர் மூண்ட சமயம், கைதிகளுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்படி போருக்கு அனுப்பப்பட்டு தனது நாட்டுக்காக உயிரிழந்த தியாகிதான் அந்தப் போர்வீரர் என அறிந்துகொண்டார். அந்த வீரர் மரணதண்டனை மூலம் இறந்திருந்ததால் அது அவருக்கு அவமானமாக இருந்திருக்கும். ஆனால் இப்போதோ அவர் தியாகியாக இறந்துள்ளார். ஆபிரகாம் லிங்கன் அவர்களின் மன்னிப்பு அந்த மரணதண்டனைக் கைதியைத் தியாகி ஆக்கியுள்ளது. அந்த நன்றியுணர்வில்தான் அவர் லிங்கன் அவர்களின் படத்தை முத்தமிட்டபடி உயிர் துறந்திருக்கிறார். ஆம். மன்னிப்பதன்மூலம் பெரும் குற்றவாளிகளையும் தியாகிகளாக்கலாம். மன்னிப்பு, மன்னிப்பவரைத் தெய்வமாக நோக்கச் செய்யும். அதோடு, மன்னிக்கப்படுபவரும் உயர்வடைகிறார். “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் வானகத்தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்”(மத்.6,14). “உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்”(மத்.5,44) என்று இயேசு சொன்னார்.
என்னைத் துன்புறுத்தியவரை, என்னைப் புண்படுத்தியவரை நான் எப்படி மன்னிப்பது என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஓர் ஊரில் ஓர் அருள்பணியாளர் உளவியல் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரிடம் தனியாகச் சென்று தனது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டார். எனது திருமண வாழ்க்கை முறிந்துவிட்டது. 15 ஆண்டுகளாக நானும் எனது கணவரும் பிரிந்து வாழ்கிறோம். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் வேறு ஓர் ஊரில் பிள்ளைகளுடன் வாழ்கிறார். அவர் எனக்குச் செய்த கொடுமைகளை என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியவில்லை என்று சொன்னார். அப்போது அந்த அருள்ணியாளர் அப்பெண்ணிடம், 15 ஆண்டுகள் ஆகியும் நீங்கள் இன்னும் அந்தப் பழைய நினைவுகளை உங்களோடு சுமந்து வாழ்கிறீர்கள், அதன்மூலம் உங்களையே வதைத்துக் கொள்கிறீர்கள், உங்கள் நிம்மதியை தொலைத்துவிட்டீர்கள், ஆனால் அது உங்கள் கணவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையே என்று கேட்டார். அப்போதுதான் அப்பெண் விழிப்புநிலைக்கு வந்தார். கடந்துபோன கசப்பான காரியங்களை மன்னிக்காமல் அவற்றைச் சுமந்து செல்வதால் உடலிலும், மனத்திலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி உணர்ந்தார். கணவரை மனதார மன்னித்துவிட்டு வாழத் தொடங்கினார், விரைவில் தன்னில் நல்ல மாற்றங்களையும் கண்டுணர்ந்தார் அப்பெண். திருவள்ளுவரும், இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் என்று சொன்னார்.
நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னியுங்கள் என்று எத்தனை தடவை அழுது அழுது கேட்டாலும் மன்னிக்க மறுக்கிறார்களே என்றும் சிலர் கேட்பதுண்டு. மன்னிப்பு என்பது, கடையில் காசு கொடுத்து வாங்கும் சரக்கு அல்ல. மன்னிப்பதற்கு உள்தூண்டுதல் அவசியம். அதற்கு மாணிக்கக் கோவிலான உயர்ந்த உள்ளம் தேவை. மேலும், நான் மன்னித்துவிட்டால் என்னைப் பலவீனமானவன் என்று நினைப்பார்கள், என்னை மதிக்க மாட்டார்கள் என்ற நினைப்பும் சிலருக்கு இருப்பதுண்டு. “நான் என்ற முனைப்பு” உணர்வும் இதற்கு ஒரு காரணம். ஆனால், மன்னிப்பதால் மன்னிப்பவருக்கே பலன் அதிகம் என்ற உண்மையை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. நாம் பிறரை மன்னிக்கும்போது ஏதோ பிறருக்கு நல்ல காரியம் செய்கிறோம் என்பதைவிட, முதலில் நமக்கு நாமே நல்ல காரியம் செய்கின்றோம் என்பதே உண்மை. நாம் பிறரை மன்னித்து வாழும்போது நாம் நோய் நீங்கி மன அமைதியுடன் வாழ்வதை நாமே உணருவோம்.
மன்னிக்கவும் மறக்கவும் விரும்பும் சிலர், அதைச் செயல்படுத்த கடினமாக இருப்பதாகவும், துன்பம் கொடுத்தவரைப் பார்க்கும்போதெல்லாம் கோபமும், வெறுப்பும், பழிவாங்கும் உணர்வுமே ஏற்படுவதாகவும் சொல்கின்றனர். இந்த எதிர்மறை உணர்வுகளை மனதுக்குள்ளே அடக்கி அடக்கி வைப்பதால், தோல்வியாதிகள், ஒவ்வாமை, நெஞ்சுவலி, தலைவலி, வயிற்று எரிச்சல், குடல்புண் இப்படி பல்வேறு நோய்களால் வேதனைப்படுவதும், தூக்கமும், மனஅமைதியும் கெட்டு மனது எப்போதும் கவலையுடன் இருப்பதையும் உணர்ந்துள்ளனர். உளவியல் முறைப்படி எத்தனையோ பயிற்சிகளைச் செய்தும், அறிவுரைகளைக் கேட்டும் பிறரை மன்னிக்க முடியவில்லையே என வேதனைப்படுகின்றனர். அந்நேரங்களில் நாம் அணுகவேண்டிய ஒரே ஆள் இறைவன். அவர் நமக்காக எப்பொழுதும் காத்திருக்கும் ஊதாரித்தந்தை. அவர் இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர். எப்போதும் மன்னிக்கத் தயாராக இருப்பவர். அவரிடம், இறைவா, எனக்கு மன்னிக்கும் மனதைத் தாரும் எனச் செபிக்க வேண்டும்.
இப்படி அடிக்கடி சொல்லிவரும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் “மன்னிப்பு விழா” பற்றி அறிவித்தார். இம்மாதம் 28,29 தேதிகளில், அதாவது வருகிற வெள்ளி மற்றும் சனி தினங்களில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்திலும், உலகெங்கும் இருக்கின்ற அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் மன்னிப்பு விழா சிறப்பிக்கப்படும் என அறிவித்தார். ஆண்டவரின் மன்னிப்பை நாம் கொண்டாட வேண்டுமெனக் கூறினார். காணாமல்போன மகன் உவமையில், தனது இளைய மகன் செய்த அனைத்துத் தவறுகளையும் மனதைவிட்டு அகற்றி, பெரிய விருந்து வைத்து அந்த மகனை ஏற்றுக்கொண்ட அன்புத்தந்தைபோல் ஆண்டவர் நமக்கு வழங்கும் மன்னிப்பை நாம் கொண்டாட வேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். "ஆண்டவரோடு 24 மணிநேரம்" என்றழைக்கப்படும் இச்செபம், தபத்தின் சிறப்பு நேரமாக இருக்கும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
புத்தருடைய வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி நாம் வாசித்திருக்கிறோம். ஒரு சமயம் புத்தர் தனது போதகத்தில் மூடநம்பிக்கைகளைத் சாடிக் கொண்டிருந்தார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அவர் பல காலம் மூடநம்பிக்கையில் ஊறியிருந்தவர். அவர் எழுந்து புத்தர் முகத்தில் காறித் துப்பினார். புத்தர் சிரித்தபடி, இவ்வளவுதானா என்று கேட்டார். துப்பியவருக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தர் இப்படி செயல்படுவார் என எதிர்பார்க்காத அவர் உடனடியாக அங்கிருந்து போய்விட்டார். அன்று இரவு அவரால் தூங்கவே முடியவில்லை. விடிந்ததும் முதல் வேலையாக புத்தரிடம் சென்றார். புத்தர் காலில் விழுந்து கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார் அவர். உன்னை யார் மன்னிப்பார்கள் என்று புத்தர் கேட்க, நீங்கள்தான் மன்னிக்க வேண்டும் என்றார் அவர். அப்போது புத்தர், நீர் யார்மீது துப்பினாயோ அவர் இப்போது இல்லை, துப்பியவரும் இப்போது இல்லை. இருவரும் நேற்றே இறந்து போனார்கள். நீரும் புது மனிதர். நானும் புது மனிதர். அப்படியிருக்க நீர் யாரிடம் மன்னிப்புக் கேட்கிறீர், நான் யாரை மன்னிப்பேன், அது நடக்காத காரியம் என்று சொன்னார் புத்தர்.
மனிதர் கணந்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றனர். மனிதரில் கணந்தோறும் புது இரத்தம், புது அணுக்கள், புது எண்ணம் உருவாகின்றன. எல்லாமே ஓடுகின்ற ஆற்று நீர் போன்று மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்த உண்மை தெரிந்தும், யாரோ என்றோ எப்பொழுதோ நமக்கு எதிராகச் செய்த தீங்குகளை நினைத்துக்கொண்டு மனதில் அழுது கொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு நாமே தண்டனை விதித்துக் கொள்கிறோம். இதனால் அந்த ஆளை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது பகை உணர்வு மேலோங்கி பிரச்சனை மீண்டும் தலைதூக்குகிறது. இது தேவைதானா? கடந்தவைகள் கடந்தவைகளாகவே இருக்கட்டும். பழைய குப்பைகளைக் கிளறுவதால் புழு பூச்சிகளே வெளியே வரும். ஆதலால் நம்மைப் புண்படுத்திய மனிதரை மன்னிப்போம், அவரின் அச்செயல்களை மறப்போம். ஆனால் அவை கற்றுத்தந்த நல்பாடங்களை ஒருபோதும் மறக்காதிருப்போம்.







All the contents on this site are copyrighted ©.