2014-03-22 16:09:13

திருத்தந்தை பிரான்சிஸ் மாஃபியாவிடம் : நரகத்தின் பாதையிலிருந்து இப்பொழுதே திரும்பி வாருங்கள்


மார்ச்,22,2014. மாஃபியாக் குழுவின் ஆண்களே, பெண்களே, தயவுகூர்ந்து உங்கள் வாழ்வை மாற்றுங்கள், மனம் திரும்புங்கள், தீமை செய்வதை நிறுத்துங்கள், உங்களின் நன்மைக்காகக் கேட்கிறேன், முழந்தாள்படியிட்டு உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன் என்று இவ்வெள்ளி மாலை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியில் மாஃபியாக் குற்றக் கும்பலுக்குப் பலியாகியுள்ள ஏறக்குறைய 15 ஆயிரம் பேரின் குடும்பங்களின் 700 பிரதிநிதிகளுடன் இவ்வெள்ளி மாலை உரோம் புனித 7ம் கிரகரி ஆலயத்தில் செப வழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாஃபியாக் குற்றக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றங்களைக் கைவிடவும், நித்திய அழிவைத் தவிர்த்து நடக்கவும் கேட்டுக்கொண்டார்.
நீங்கள் தற்போது கொண்டிருக்கும் இந்த வாழ்வு, உங்களுக்கு இன்பத்தைத் தாரது, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது, உங்களுக்கு ஆனந்தத்தைத் தாரது என்று மாஃபியாக் குற்றக் கும்பலுக்குக் கூறிய திருத்தந்தை, பல்வேறு அழுக்கு நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் தற்போது கொண்டிருக்கும் வல்லமையும் பணமும் பல மாஃபியாக் குற்றங்களிலிருந்து வந்த இரத்தக்கறைப்படிந்த பணம், இரத்தக்கறைப்படிந்த சக்தி, இவற்றை உங்களால் அடுத்த வாழ்வுக்கு உங்களோடு எடுத்துச் செல்லமுடியாது என்றும் கூறினார்.
இதே பாதையில் நீங்கள் தொடர்ந்து சென்றால், உங்களுக்காகக் காத்திருக்கும் நரகத்தில் கொண்டுபோய் உங்களைச் சேர்க்கும், ஆனாலும் இப்பாதையைக் கைவிடுவதற்கு இன்னும் அவகாசம் உள்ளது, உங்களுக்கு அப்பாவும் அம்மாவும் இருக்கின்றனர், அவர்களை நினைத்துப் பார்த்து சிறிது கண்ணீர் சிந்தி மனம் திரும்புங்கள் என்றும் மாஃபியாக் குற்றக் கும்பலை நோக்கிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்செப வழிபாட்டில் கலந்துகொண்டவர்களிடம், ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து நடத்துமாறும், அதற்கு இறைவன் சக்தியைத் தருவதற்கு ஒன்றிணைந்து செபிப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாஃபியாக் குற்றக்கும்பலுக்கு எதிராக, இத்தாலியில் 1996ம் ஆண்டில் Libera என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது முதல், ஆண்டுதோறும், வசந்த காலம் தொடங்கும் மார்ச் 21ம் தேதியன்று, மாஃபியாக் குற்றக் கும்பலுக்குப் பலியாகியுள்ளவர்கள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.