2014-03-22 16:09:27

இத்தாலியின் இளம் அருள்சகோதரி ஒருவரின் அசத்தலான தொலைக்காட்சி நிகழ்ச்சி


மார்ச்,22,2014. இத்தாலியின் ஊர்சுலைன் திருக்குடும்பச் சபையைச் சேர்ந்த 25 வயது அருள்சகோதரி Cristina Scuccia, "The Voice of Italy," என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியின் நான்கு புகழ்பெற்ற நடுவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மார்ச் 19, இப்புதனன்று "The Voice of Italy," என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருள்சகோதரி Cristina, அமெரிக்கப் பாடகரும், கவிதை எழுதுபவரும், நடிகையுமான Alicia Keys அவர்களின் “No One” என்ற பாடலைப் பாடினார்.
பொதுவாக இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது நடுவர்கள், போட்டியாளரைப் பார்க்காத வகையில் பின்பக்கமாகத் திரும்பியிருப்பார்கள். பாடுபவரின் குரல் பிடித்திருந்தால் மட்டுமே அவர்கள் திரும்புவார்கள். அப்படி அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஓர் அருள்சகோதரி பாடிக்கொண்டிருப்பதையும், அவரது திறமையையும், துறவற ஆடையையும் கண்டு வியந்துள்ளனர்.
அருள்சகோதரி Cristina, இந்நிகழ்ச்சியில் பாட வந்ததற்கான காரணத்தையும், உண்மையிலேயே அவர் அருள்சகோதரி தானா எனவும் நடுவர்கள் கேட்டபோது, தான் உண்மையிலேயே, உண்மையிலேயே அருள்சகோதரிதான் எனவும், நான் பெற்றுள்ள இந்தக் கொடையைப் பகிர்ந்துகொண்டு நற்செய்தி அறிவிக்க வந்தேன் எனவும் கூறியுள்ளார்.
Raffaella Carra, J-Ax, Noemi, Piero Pelu ஆகிய நான்கு புகழ்பெற்ற இத்தாலியப் பாடகர்கள் இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்தனர்.
அருள்சகோதரி Cristina, தனது திறமையை இத்தாலிய மக்களோடு பகிர்ந்துகொண்டது குறித்து திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் டுவிட்டர் செய்தியில், உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள் என எழுதியுள்ளார்
(1 பேதுரு4:10)”.

ஆதாரம் : EWTN







All the contents on this site are copyrighted ©.