2014-03-21 16:27:17

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தையைக் கொலை செய்யாதீர்கள்


மார்ச்,21,2014 நம் இதயங்களில் இறைவார்த்தையைக் கொலை செய்யாதிருப்பதற்கு, நாம் தாழ்மையுள்ளவர்களாகவும், செபிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கொடிய குத்தகைக்காரர் உவமை குறித்து விளக்கியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்த உவமையில் வரும் பரிசேயர்களும், மூப்பர்களும், குருக்களும் இறைவார்த்தைக்குத் தங்கள் இதயங்களைத் திறக்காமல் இருந்ததால் தவறிழைத்தனர் எனக் கூறினார்.
இந்த மக்களின் நடவடிக்கைகள் நம் நடவடிக்கைகளாகவும் இருக்கின்றன எனவும், இந்த மக்களின் சொந்த ஆதாயங்கள், சொந்தக் கருத்துக்கள் ஆகியவற்றின்படி இறைவார்த்தை இருந்தது எனவும், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம்போல் செய்தனர், இது அவர்கள் கொலை செய்வதற்கும் இட்டுச் சென்றது எனவும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர் தாழ்ச்சியுடன் இல்லாவிட்டால், அவர் செபிக்காவிட்டால் இறைவார்த்தையை தனது விருப்பப்படி அமைக்கும் ஆபத்தை அவர் எதிர்கொள்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இறைவார்த்தையைக் கொலை செய்யாதிருப்பதற்கும், தூய ஆவியை அணைத்துவிடாதிருக்கவும் முதலில் நாம் தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும், இரண்டாவது நாம் செபிக்க வேண்டுமென்றும் கூறினார்.
தாழ்ச்சியுடனும், செபத்துடனும் இறைவார்த்தையை நாம் கேட்டு அதற்குப் பணிந்து நடக்க வேண்டும், திருஅவையில் தாழ்ச்சியும், செபமும் அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.