2014-03-20 15:34:19

திருத்தந்தையின் கேள்வி - நான், எனது, எனக்கு, என்ற பொய் தெய்வங்களை படைத்து, ஆராதனை செய்கிறோமா


மார்ச்,20,2014. தன்னையே நம்பும் மனிதர், பாலைநிலத்தில் வளர்ந்து, எவ்விதப் பயனும் தராமல் அழிந்துபோகும் புதரைப் போன்றவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளையும் லூக்கா நற்செய்தியையும் மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
தன்னையும், தன் நண்பர்களையும் நம்புவதே நடைமுறை வாழ்வுக்கு ஏற்றது என்று கூறும் நாம், இறைவனை மிகச் சிறிய அளவே நம்புகிறோம் என்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இவ்விதம் தன்னிலேயே நம்பிக்கையும், நிறைவும் கண்டு, தன் வீட்டின் கதவு, சன்னல்கள் அனைத்தையும் மூடி வாழ்ந்த செல்வரை நற்செய்தியில் சந்திக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நான், எனது, எனக்கு, என்னுடன் என்ற பலவகை பொய் தெய்வங்களை படைத்து, அவற்றிற்கு ஆராதனை செய்கிறோமா அல்லது, உண்மைக் கடவுளை ஆராதிக்கிறோமா என்ற கேள்வியை தவக்காலத்தில் எழுப்புவது பயனுள்ள ஒரு முயற்சி என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
தன் செல்வத்தையும் புகழையும் இழந்து, பாதாளத்தில் துன்புற்ற செல்வர் நமக்கு ஒரு நல்வழியைக் காட்டுகிறார் என்பதையும் தன் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.
பாதாளத்தில் இருந்த செல்வர், கண்களை விண்ணோக்கி உயர்த்தி 'தந்தையே' என்று அழைத்தபோது, கடவுள் 'மகனே' என்று பதில் கூறும் வாய்ப்பு உண்டு என்பதை இச்செல்வர் நமக்கு உணர்த்துகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.