2014-03-20 15:39:16

அக்கறையின்மை உலகமயமாக்கப்படுவது ஆபத்து - கர்தினால் பீட்டர் டர்க்சன்


மார்ச்,20,2014. தென் சூடான் நாட்டில் அமைதி நிலைபெறவேண்டும் என்பது தன் செபம் என்றும், அக்கறையின்மை உலகமயமாக்கப்படுவது ஆபத்து என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் 18, இச்செவ்வாய் முதல், மார்ச் 23, வருகிற ஞாயிறு முடிய தென் சூடான் நாட்டில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள, நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், Juba நகரின் புனித யோசேப்பு ஆலயத்தில் இவ்வாறு கூறினார்.
அக்கறையின்மையை உலகெங்கும் வளர்ப்பதற்குப் பதிலாக, நிலையான அமைதியை உலகெங்கும் எடுத்துச் செல்வது கிறிஸ்தவர்களின் முக்கியப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.
Ghana நாட்டைச் சேர்ந்த கர்தினால் டர்க்சன் அவர்கள், தங்கள் நாட்டுக்கு வந்திருப்பது திருத்தந்தையின் அருகாமையையும், ஆசீரையும் தங்களுக்குக் கொணர்ந்துள்ளது என்று தென் சூடான் திருப்பீடத் தூதர், பேராயர் Charles Daniel Balvo அவர்கள் கூறினார்.
இவ்வியாழனன்று கர்தினால் டர்க்சன் அவர்கள், தென் சூடான், சூடான் ஆகிய நாடுகளின் ஆயர்களைச் சந்தித்தபின், தென் சூடான் நாட்டுத் தலைவரையும் சந்திக்கிறார்.
மார்ச் 23, ஞாயிறன்று Kator நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தில் ஆற்றும் திருப்பலியுடன் கர்தினால் டர்க்சன் அவர்களின் தென் சூடான் பயணம் நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.