2014-03-19 16:09:35

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மார்ச் 19,2014. தூய யோசேப்பின் திருவிழா சிறப்பிக்கப்பட்ட இப்புதனன்று உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில், வழக்கத்திற்கு மாறாக திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் முதலாம் ஆண்டு நிறைவு நாளாகும். உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3மணிக்கு தூய யோசேப்பு குறித்துத் தன் மறைப்போதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அனைத்துலக திருஅவையின் பாதுகாவலரும் கன்னிமரியின் கணவருமாகிய தூய யோசேப்பின் விழாவை நாம் சிறப்பிக்கிறோம். திருக்குடும்பத்தின் காவலராகக் கொண்டாடப்படும் தூய யோசேப்பு, தன் பணி மூலம் அனைத்துத் தந்தையர்களுக்கும், கல்வி கற்பிப்போருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். மனிதனாக இயேசு வளர்ச்சி கண்டதில் தூய யோசேப்பு காட்டிய அக்கறை குறிப்பிடும்படியானது. 'இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக வாழ்ந்து வந்தார்'(2:52), என புனித லூக்கா நற்செய்தி உரைப்பதிலிருந்து தூய யோசேப்பின் பங்களிப்பு தெளிவாகின்றது. நாசரேத்தின் தச்சுத் தொழிலாளியான தூய யோசேப்பு, இளைஞர் இயேசுவுக்கு தன் தொழிலையும் தொழிலின் மாண்பையும் கற்றுக்கொடுத்தார். இறைவனுக்கான வணக்கம், செபம், இறைவார்த்தைக்கு விசுவாசமாயிருத்தல், இறைவிருப்பத்திற்குக் கீழ்ப்படிதல் போன்றவைகளை உள்ளடக்கிய ஞானத்தை இயேசுவுக்கு வழங்கினார் தூய யோசேப்பு. தந்தையாம் இறைவனுடன் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த தனிப்பட்ட உறவைப் புரிந்துகொள்ளவும், பாராட்டி மகிழவும் மனிதன் என்ற முறையில் வளர்வதற்கு தூய யோசேப்பின் தந்தைக்குரிய எடுத்துக்காட்டு உதவுவதாக இருந்தது. தூய வளன், தன் வாழ்விலும் இதயத்திலும் தூய ஆவியின் செயல்பாடுகளுக்கு பதிலுரைத்து அதன் வழி இளைஞரான இயேசுவை அன்னை மரியுடன் இணைந்து வழிநடத்தினார். அவரின் செபம் மற்றும் எடுத்துக்காட்டு மூலம் தூய யோசேப்பு, அனைத்துப் பெற்றோருக்கும், இளையோருக்குக் கல்விக் கற்பிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்போருக்கும், அருள்பணியாளர்களுக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக இருப்பாராக.
இவ்வாறு, தூய யோசேப்பு திருவிழாவையொட்டிய தன் இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.