2014-03-18 16:24:45

மனித வணிகத்தைத் தடைசெய்யும் உடன்பாட்டில் வத்திக்கான், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, முஸ்லிம்கள் கையெழுத்து


மார்ச்,18,2014. உலக அளவில் மனித வணிகத்தை 2020ம் ஆண்டுக்குள் நிறுத்திவிடுவதற்கு ஒன்றிணைந்து உழைப்பதற்கு உறுதி எடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உடன்பாட்டில் வத்திக்கான், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, முக்கியமான ஒரு முஸ்லிம் நிறுவனம் ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
இத்திங்களன்று வத்திக்கான் பத்திரிகையாளர் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டில், உலகின் பிற பெரிய மதங்களும் இணையும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிமைத்தனத்தின் நவீன வடிவங்களைத் தடுத்தல், இதற்குப் பலியானவர்களைப் பாதுகாத்து மறுவாழ்வு அளித்தல், மனித வணிகத்தைக் கண்டனம் செய்யும் நடவடிக்கைகளைத் தூண்டுதல் போன்றவைகளுக்கு உலக அளவில் முயற்சிகள் எடுப்பதற்கு இவ்வுடன்படிக்கை வழி செய்கிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், திருப்பீட அறிவியல் கழகத் தலைவர் ஆயர் Marcelo Sanchez Sorondo, கெய்ரோவின் முக்கிய சுன்னி முஸ்லிம் பிரிவு நிறுவனமான Al-Azhar பல்கலைக்கழகத் தலைவர் Ahmad el-Tayeb, கான்டர்பரி பேராயரின் உரோம் பிரதிநிதி பேராயர் David Moxon, Walk Free அமைப்பின் நிறுவனர் Andrew Forrest ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.