2014-03-18 16:24:30

திருத்தந்தை பிரான்சிஸ் : தவக்காலம் வாழ்வைச் சீர்செய்து ஆண்டவரிடம் நெருக்கமாகச் செல்வதற்கு அழைக்கும் காலம்


மார்ச்,18,2014. நாம் நம் வாழ்வைச் சீர்படுத்தி, செம்மைப்படுத்தி, நம் வாழ்வை மாற்றி நாம் ஆண்டவரிடம் நெருக்கமாகச் செல்வதற்கு உதவும் காலம் தவக்காலம், ஆனால் நல்லவர்கள்போல் முகமூடி அணிந்துள்ள வெளிவேடக்காரர்கள் போல் அல்லாமல், நேர்மையான வழியில் நாம் ஆண்டவரிடம் செல்ல வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், மனமாற்றம் என்ற தலைப்பில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு உரைத்தார். சோதோம் கொமோரா ஆகிய பாவம் நிறைந்த நகரங்களை மனமாற்றத்துக்கு ஆண்டவர் அழைத்தது போல நம்மையும் அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் ஆண்டவரிடம் நெருங்கி வரவேண்டுமென்று அவர் விரும்புகிறார், நம்மை மன்னிப்பதற்கு நமக்காகக் காத்திருக்கிறார் என்பதை அவர் உறுதி செய்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, நமது அணுகுமுறை உண்மையானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
நான் மற்றவர்களைவிட நன்றாக இருக்கிறேன் என்ற எண்ணத்தையும், தங்களை நல்லவர்கள் என ஏமாற்றிக்கொள்ளும் வெளிவேடக்காரர்களின் போக்கையும் எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், மக்களை வெளிவேடக்காரர்களாக ஆக்குவது எது என்பது குறித்தும் விளக்கினார்.
நீதியை நமது நோக்கமாகக் கொண்டு, தவறுகளைத் திருத்தி, திக்கற்றோரின் விண்ணப்பங்களைக் கேட்டு, கைம்பெண்களுக்கு ஆதரவாகச் செயல்படும்போதும், நோயாளிகள், ஏழைகள், தேவையில் இருப்போர், அறியாமையில் இருப்போர் ஆகியோர்மீது அக்கறை காட்டும்போதும் நாம் சரியான பாதையில் செல்கிறோம் எனக் கூற முடியும் எனவும் திருத்தந்தை கூறினார்.
நம் சகோதர சகோதரிகளையும், ஏழைகளையும், நோயாளிகளையும் நன்றாக நடத்தும்போது நாம் இயேசு கிறிஸ்துவோடு இருக்கிறோம் என்பதன் அடையாளங்கள் என்றும், நமக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து, மனம் வருந்தி ஆண்டவரிடம் நெருங்கிவர துணிச்சலையும் ஒளியையும் அவரிடம் கேட்போம் என்றும் இத்திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.