2014-03-18 16:25:16

சிறுமிகளுக்கு கல்வி வழங்க நாடுகளுக்கு ஐ.நா. கோரிக்கை


மார்ச்,18,2014. சிறுமிகளுக்கு கல்வி வழங்குவது அனைத்து சமுதாயத்துக்கும் பலனளிக்கும் என்பதால், இவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு உலக அளவில் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுமாறு யுனெஸ்கோ நிறுவனம் கேட்டுள்ளது.
உலகளாவியக் கல்வி குறித்து துபாயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா போக்கோவா, 2011ம் ஆண்டில் 3 கோடியே 10 இலட்சம் சிறுமிகள் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர், இவர்களில் 55 விழுக்காட்டினர் பள்ளிக்கு ஒருபோதும் சென்றதே கிடையாது எனத் தெரிவித்தார்.
உலகில் எழுத்தறிவற்ற 77 கோடியே 40 இலட்சம் வயதுவந்தோரில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் என்றும் கூறிய போக்கோவா, இந்நிலை, திறமையையும், மனித அறிவையும் வீணாக்குவதாக உள்ளது எனக் கூறினார்.
சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் சிறுமிகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால், ஒரு தலைமுறை இளம்பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் எச்சரித்தார் யுனெஸ்கோ இயக்குனர் போக்கோவா.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.