2014-03-18 16:24:38

கிறிஸ்தவ அன்பு என்பது பலனைக் கணக்கிடாத ஓர் அன்பு, திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,18,2014. கிறிஸ்தவ அன்பு என்பது பலனைக் கணக்கிடாத ஓர் அன்பு; இதுவே நல்ல சமாரியர் சொல்லித்தரும் பாடம்; இதுவே இயேசு கற்றுத்தரும் பாடம் என்று தனது இச்செவ்வாய் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உகாண்டா நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளாததால், அந்நாட்டு மறைசாட்சிகள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தேதிகளைத் தள்ளி வைத்துள்ளனர் உகாண்டா ஆயர்கள்.
வருகிற அக்டோபரில் சிறப்பிக்கப்படவிருந்த இப்பொன்விழாக் கொண்டாட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, உகாண்டா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜான் பாப்டிஸ்ட் ஒடாமா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த அழைப்பிதழுக்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் இருப்பதால், இந்த 2014ம் ஆண்டில் உகாண்டாவுக்குத் தான் வர இயலாது எனக் கூறியிருப்பதாகவும் அறிவித்தார்.
உகாண்டா மறைசாட்சிகள், 1920ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால் முத்திப்பேறுபெற்றவர்களாகவும், 1964ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் புனிதர்களாகவும் உயர்த்தப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.