2014-03-18 16:25:29

காசநோயை ஒழிக்க இந்தியாவின் 16 மாநிலங்களில் புதிய திட்டம்


மார்ச்,18,2014. தமிழகம் உட்பட, இந்தியாவின் 16 மாநிலங்களில், காசநோயைக் கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சியில், புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
காசநோயை கட்டுப்படுத்த, அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்து ஊட்டியில் நடந்த இரு நாள் கருத்தரங்கில், உலகில், ஆண்டுக்கு, 90 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 30 இலட்சம் பேர், உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மொத்த காசநோயாளிகளுள் ஐந்தில் ஒருவர், இந்தியாவில் உள்ளார் எனக் கூறப்பட்டது.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற, இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் டாக்டர் ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியபோது, தொடர் சிகிச்சை எடுத்து கொண்டால் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
அரசுத் துறையுடன், தனியார் மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து, காசநோய் சிகிச்சை வழங்குவதன் மூலம், நோயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரும் திட்டம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட, 16 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், அரசு காசநோய் பிரிவினர் மூலம் இலவசமாகவே வழங்கப்படும் என்றும் இவர்கள் கூறினர்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.