2014-03-17 15:13:23

வாரம் ஓர் அலசல் – உணர்வுகள் நம் கட்டுக்குள்


மார்ச்,17,2014. RealAudioMP3 அன்பு நேயர்களே, இரண்டு நாள்களுக்கு முன்னர் இத்தாலியின் ஒரு சிறு ஊரில் நாங்கள் ஓர் ஆன்மீகக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு சகோதரி எழுந்து, தற்போது உக்ரைன் நாட்டில் நடக்கும் பிரச்சனை என்ன? திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டுக்காகச் செபிக்குமாறு அடிக்கடி பொதுவில் விண்ணப்பித்து வருகிறார்; அவரும் அச்சமயத்தில் மக்களோடு சேர்ந்து சில நிமிடங்கள் செபிக்கிறார்; தொலைக்காட்சி செய்திகளிலும் தினமும் அந்நாடு பற்றிச் சொல்கின்றனர் என்று கேட்டார். இதே கேள்வியை கடந்த வாரத்தில் மேலும் இரு சகோதரிகள் கேட்டனர். உக்ரைன் கத்தோலிக்க ஆயர்களும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் உக்ரைனில் அமைதி நிலவவும், குறிப்பாக, தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள கிரிமியாப் பகுதியின் நெருக்கடிநிலை களையப்படுவதற்கும் செபிக்குமாறு கேட்டுள்ளனர். கிரிமியாவில் பதட்டநிலை எந்த அளவுக்கு நிலவுகிறதென்றால், உக்ரைன் இராணுவத்துக்கு ஆன்மீக வழிகாட்டியாகப் பணிசெய்யும் உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க அருள்பணியாளர் Mykola Kvych என்பவர், இச்சனிக்கிழமையன்று இரஷ்ய ஆதரவுப் படைவீரர்களால் கடத்தப்பட்டுள்ளார். இக்கடத்தல் பற்றிக் கண்டனம் தெரிவித்த உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் Borys Gudziak அவர்கள், ஒவ்வொரு கடத்தல் நிகழ்வும், அதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பயங்கரமானது; இது மனித உரிமைகளையும், கடவுளால் வழங்கப்பட்டுள்ள மனித மாண்பையும் கொடூரமாய் மீறுவதாகும் எனச் சொல்லியுள்ளார். உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கிரிமியாப் பகுதியைவிட்டு வெளியேற வேண்டுமென்று இம்மாதத் தொடக்கத்தில், வாய்மொழியாகவும், எழுத்துவடிவிலும் அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இம்மாதம் 7ம் தேதி இரவு மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் சீனத் தலைநகர் பீஜிங் நகருக்குப் புறப்பட்ட விமானத்தின் நிலை மர்மாகவுள்ளது. பத்து நாட்கள் ஆகியும், விமானத்தை பற்றிய விவரம் கிடைக்கவில்லை. விமான ஓட்டிகளே கடத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ள நிலையில், விமானிகளின் பின்னணி குறித்தும் மலேசிய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் இந்த மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்காகச் செபிப்போம் என விசுவாசிகளைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பயணிகளுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.
RealAudioMP3 அன்பு நேயர்களே, கிரிமியாப் பகுதியில் ஆன்மீகப் பணிசெய்யும் அருள்பணியாளர் கடத்தப்படும் அளவுக்கு அங்கு நடப்பதுதான் என்ன? கிரிமியாப் பகுதி, கருங்கடலின் வடக்குக் கரையிலும், Azov கடலின் மேற்குக் கரையிலும் அமைந்துள்ள தீபகற்பமாகும். 27 ஆயிரம் சதுர கிலோமீட்டரைக் கொண்ட கிரிமியா தீபகற்பம், ஆந்திரப் பிரதேச மாநிலத்தைவிட அளவில் சற்று சிறியதாகும். சிமேரியர், கிரேக்கர், பல்கேரியர், துருக்கியர், மங்கோலியர், கோத்து என, கிரிமியப் பகுதி, வரலாற்றில் அவ்வப்போது பல இனத்தவரால் ஆக்ரமிக்கப்பட்டு ஆளப்பட்டது. கிரிமியாப் பகுதி, 18ம் நூற்றாண்டு முதல் இரஷ்யாவிடம் இருந்தது. பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியிடமிருந்தது. அச்சமயம் கிரிமியாவுக்காகப் போர் நடத்தப்பட்டு, அது சோவியத் ஒன்றியத்தின்கீழ் வந்தது. உக்ரைன் இரஷ்யப் பேரரசில் இணைந்து 300 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக, 1954ம் ஆண்டு பிப்ரவரி 19ம் நாள், சோவியத் தலைவர் Nikita Khrushchev அவர்கள், இப்பகுதியை உக்ரைனுக்குப் பரிசாகக் கொடுத்தார். எனவே கிரிமியா, உக்ரைன் நாட்டின் ஆதிகாரத்தின்கீழ் வந்தது. இப்பகுதி, உக்ரைன் நாட்டுக்குள், தன்னாட்சி அதிகாரத்தைக் கொண்ட குடியரசாக விளங்குகிறது. 2001ம் ஆண்டில், உக்ரைன் நாடு எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கிரிமியாவில், 58.5 விழுக்காட்டு இரஷ்யர்களும், 24.4 விழுக்காட்டு உக்ரைனியர்களும், 12.1 விழுக்காட்டு கிரிமிய தத்தார் இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர்.
கிழக்கு ஐரோப்பாவில் 1989ம் ஆண்டில் கம்யூனிசம் வீழ்ச்சியுறத் தொடங்கியபோது, முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். இந்நாடு, தனது பொருளாதாரப் பிரச்சனைகளைச் சீர்படுத்தும் விதமாக, EU என்ற ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்குத் திட்டமிட்டிருந்தது. ஆனால் உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யனுகோவிச், கடைசி நேரத்தில், அதாவது 2013ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி இத்திட்டத்தைக் கைவிட்டார். எனவே உக்ரைன் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டுமென விரும்பிய அந்நாட்டவர், தலைநகர் கீவ் நகர அரங்கையும், சுதந்திர வளாகத்தையும் ஆக்ரமித்தனர். போராட்டம் தொடர்ந்தது. அது இரத்தும் சிந்தும் பெரும் வன்முறைப் போராட்டமாக மாறியது. போராட்டதாரர்கள், அரசுக் கட்டிடங்களை ஆக்ரமித்தனர். நாடு ஸ்தம்பித்தது. கீவ் நகரில் கடந்த பிப்ரவரி 20ம் தேதியன்று மட்டும் குறைந்தது 88 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அரசுத்தலைவர் விக்டர் யனுகோவிச் பிப்ரவரி 22ம் தேதியன்று பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறினார். இதையடுத்து உக்ரைன் நாடாளுமன்றம் அரசுத்தலைவரைப் பதவி நீக்கம் செய்தது. நாட்டின் பொருளாதார நிலைமைகளைச் சீரமைக்கவும், வருகிற மே மாதம் 25ம் தேதி தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உக்ரைன் நிலைமை இவ்வாறிருக்க, இரஷ்யாவுக்கு ஆதரவான ஆயுதப் போராளிகள் கிரிமியத் தலைநகர் சிம்பெரோப்போல்(Simferopol)லுள்ள கட்டிடங்களை பிப்ரவரி 27, 28 தேதிகளில் கைப்பற்றினர். இம்மாதம் 2ம் தேதி(மார்ச்,2) கிரிமியாவை இரஷ்யப் படைகள் கைப்பற்றின. இரஷ்யப் போர்க் கப்பல்கள் கிரிமியக் கடல்பகுதியை முற்றுகையிட்டன. இந்நிலையில், கிரிமியா, இரஷியாவுடன் இணைய முடிவெடுத்து, அதற்கு ஆதரவான தீர்மானத்தை கிரிமியா நாடாளுமன்றம் இம்மாதம் 6ம் தேதி(மார்ச்,6) நிறைவேற்றியது. இதையொட்டி மார்ச் 16, இஞ்ஞாயிறன்று பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பும் நடந்தது. அதில், கிரிமியாவிலுள்ள 15 இலட்சம் வாக்காளர்களில் 83 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் 95 விழுக்காட்டினர் இரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, கிரிமியா நாடாளுமன்றம், உக்ரைனிலிருந்து பிரிவதாக இத்திங்களன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இரஷ்யக் கூட்டமைப்பில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது.
இதற்கிடையே, இந்த வாக்கெடுப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்று உக்ரைனும், அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அறிவித்துள்ளன. இரஷ்யாவின் ஆதரவுடன் நடந்த இந்த வாக்கெடுப்பை முன்னிட்டு, இரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் இத்திங்களன்று பிரசல்லஸில் கூட்டம் நடத்தினர். மேலும், இந்த வாக்கெடுப்பின் முடிவினை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடாது என கடந்த சனிக்கிழமையன்று, ஐ.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்க ஐக்கிய நாடு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின்மீது ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடந்த வாக்கெடுப்பில் 13 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அமெரிக்காவின் தீர்மானத்தை தனது “வீட்டோ” உரிமையின் மூலம் இரஷ்யா எதிர்த்தது. இரஷ்யாவின் நட்பு நாடான சீனா ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து ஒதுங்கியது. இதற்கிடையே, இரஷ்யாவின் இந்நடவடிக்கையை எதிர்த்து, மாஸ்கோவில் குறைந்தது ஐம்பதாயிரம் பேர் எதிர்ப்புப் பேரணி ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
உலகெங்கும் வன்முறைகளும் போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை. இத்தாலியில் மாஃபியா குற்றக் கும்பலின் வன்முறைக்குத் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் துன்புறுகின்றனர். இந்த மாஃபியாவால் பலியான அப்பாவி மக்களின் ஏறக்குறைய 700 குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை(மார்ச்,21) மாலை 5.30 மணிக்கு உரோம் புனித 7ம் கிரகரி ஆலயத்தில் செப வழிபாடு ஒன்றில் கலந்துகொள்ளவிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். வலுவற்ற மற்றும் காயமடைந்துள்ள மனித சமுதாயத்தின்மீது அனைவரும் கவனம் செலுத்தவும், உலகில் ஊழலும், மனித உரிமைகள் மறுக்கப்படும் அநீதிகளின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்படுவதற்கும் இந்த வழிபாடு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
1997ம் ஆண்டின் உலகக் குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன், இவாண்டர் ஹோலிபீல்டு ஆகிய இரு பெரும் பயில்வான்கள் களத்தில் இறங்கினார்கள். கடும் சூடான மோதல். ஜெயிக்க வேண்டுமென்ற வெறி. சில சுற்றுக்கள் முடிந்தன. ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் அமைதி அமைதி என்று நடுவர் அவர்கள் இருவரையும் பிரித்து விட்டார். ஆனால் ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் டைசனுக்கு அமைதிக்குப் பதில் கோபமும், வெறியும் தலையில் ஏறிக்கொண்டேயிருந்தன. கட்டுப்படுத்த முடியாத கோபவெறியில் தள்ளாடி தள்ளாடிப் போய் அமர்ந்தார் டைசன். இவருக்குக் கோபம் புயலின் வேகத்தைத் தொட்டபோது மீண்டும் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. அப்போது ஹோலிபீல்டு தனது ஹெல்மெட்டுத் தலையால் டைசனை ஓங்கி முட்டினார். இது விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான் எனினும், இம்மோதலை ஏற்க மறுத்த டைசனின் மனம், தனது சுயக் கட்டுப்பாட்டை இழந்தது. பற்களை நெரித்தபடி, ஹோலிபீல்டை மிதிக்க நினைத்து, தடம்புரண்டு அவரது காதைக் கடித்துவிட்டார் டைசன். இது அனைத்துலக அளவில் புகழ்பெற்ற காதுக்கடி என்று ஊடகங்கள் எழுதின. கட்டுக்கடங்கா கோபம், ஆத்திரம், பயம், வெட்கம், துக்கம், மகிழ்ச்சி என உணர்வுகள் எல்லை மீறும்போது வெட்கத்துக்குரிய செயல்களைச் செய்து விடுகிறோம். செய்த செயல்களை மாற்ற முடியாது. பேசிய சொற்களை அழிக்க முடியாது. பேசியவை பேசியவைதான். செய்தவை செய்தவைதான். எனவே அன்பர்களே, நம்மில் வன்முறையும், கோபமும், பயமும் எல்லை மீறாதிருப்பதில் கவனமாக இருப்போம். நமது கட்டுக்கடங்கா உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பழகுவோம். அப்போது நீதியும் மனித மாண்பும் மதிக்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.