2014-03-15 14:44:47

திருத்தந்தையின் திருப்பயணத் தயாரிப்பில் தென் கொரிய அரசும் திருஅவையும் இணைந்து செயல்படுகின்றன


மார்ச்,15,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ள அந்நாட்டுத் திருஅவை, இத்திருப்பயணத் தயாரிப்புக்காக ஆயர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.
திருத்தந்தையின் இத்திருப்பயணம் தென் கொரிய நாடு முழுவதையும் ஈடுபடுத்துவதால் திருஅவை, அரசிடமிருந்து முழு ஆதரவைப் பெறுகின்றது என்றும், இத்திருப்பயணத் தயாரிப்புக்களில் திருஅவையோடு சேர்ந்து பல வழிகளில் அரசு செயல்படுகின்றது என்றும் தலத்திருஅவை கூறியுள்ளது.
தென் கொரியாவின் Dajeon மறைமாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 10 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஆசிய இளையோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாடு செல்கிறார்.
இவ்விளையோர் மாநாட்டில் ஆசியாவின் 29 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.