2014-03-15 14:44:39

ஏழ்மை உணர்வைத் தனதாக்கி வாழ திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு


மார்ச்,15,2014. ஏழ்மை உணர்வைத் தனதாக்கிக் கொள்ள அழைப்புவிடுத்த அதேவேளை, சேரிகளில் ஏழைகள் மத்தியில் வாழ்ந்து அங்குப் பணிசெய்யும் அருள்பணியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அர்ஜென்டீனாவின் புவனோஸ் ஐரெஸ் சேரிகளிலிருந்து ஒலிபரப்பாகும் பண்பலை வானொலிக்குப் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோர் மத்தியில் திருஅவையின் இருப்பு குறித்த 12 கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது ஏழ்மை உணர்வைத் தனதாக்கி வாழ அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
இளையோருக்குக் கல்வி வழங்கி அவர்களுடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, சேரிகளில் வாழ்ந்து அங்குப் பணிசெய்யும் அருள்பணியாளர்களின் பணி ஏதோ கருத்தியல்கோட்பாடு அல்ல, மாறாக அது ஓர் அப்போஸ்தலிக்கப் பணி என்றும் கூறினார்.
இறுதியில், கைதிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.