2014-03-14 16:58:22

தலிபான்கள் பகுதியில் திருத்தந்தையின் உணர்வோடு கலந்து மறைப்பணியாற்றுகிறோம், பாகிஸ்தான் திருஅவைத் தலைவர்


மார்ச்,14,2014. “செல்லுங்கள், உங்களின் அடுத்தவருக்குப் பணி செய்வதற்கு அஞ்ச வேண்டாம்” என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகள், பாகிஸ்தானில் மனிதர் எளிதில் செல்ல முடியாத இடங்களில் மறைப்பணியாற்றுவதற்கு உந்து சக்தியாக இருக்கின்றன என்று அந்நாட்டு திருஅவைத் தலைவர் ஒருவர் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வியாழனோடு(மார்ச்13) ஓராண்டு நிறைவடைந்துள்ளதையொட்டி Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய Quetta அப்போஸ்தலிக்க நிர்வாகி பேரருள்திரு ரெனால்டு லாரன்ஸ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தோழமையில் மறைப்பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில், ஆயுதம் ஏந்திய தலிபான் குழுக்கள் மறைந்து வாழும் பலுசிஸ்தான் பகுதியில் மறைப்பணியாற்றிவரும் பேரருள்திரு லாரன்ஸ் அவர்கள், மனிதர் எளிதில் செல்ல முடியாத இப்பகுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைப்பணி ஆர்வத்தில் பங்குகொண்டு, அதே ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் பணிசெய்து வருவதாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மனிதர் மற்றும் உலகுக்குக் கிறிஸ்துவை வழங்குவதே அவரின் நோக்கமாக இருக்கின்றது என்றும் உரைத்த பேரருள்திரு லாரன்ஸ் அவர்கள், திருத்தந்தையின் உணர்வோடு கலந்து, இந்த எல்லைப்புறப் பகுதியில் கடினமான சூழல்களில் கிறிஸ்துவை அறிவித்து வருகிறோம் என்று கூறினார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.