2014-03-13 16:06:10

பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்: பொதுமக்கள் காலில் விழுந்து சத்தியாகிரக பிரச்சாரம்


மார்ச்,13,2014. பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என சத்தியாகிரக இயக்கத்தினர் பொதுமக்கள் காலில் விழுந்து வணங்கும் பிரச்சாரம் ஒன்று, சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் காலில் விழுந்து வணங்கும் சத்தியாகிரக பிரச்சார தொடக்க நிகழ்ச்சி, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தை, தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் தலைமையில் பல நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் 50 பேர், மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கி, பணம் வாங்காமல் வாக்களியுங்கள் எனக்கூறி பிரச்சாரம் செய்தனர்.
100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி சத்தியாகிரகப் பிரச்சாரம் செய்து வருகிறோம்; எங்கள் இயக்கத்தில் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்று, சத்தியாகிரக இயக்கத்தின் தலைவர் எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கூறினார்.
தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்; வன்முறை, லஞ்சம், சாதி போன்றவற்றிற்கு அப்பாற்பட்ட வேட்பாளரை தேர்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இதுவரை 51 லட்சம் பேர் காலில் விழுந்து வணங்கி பிரசாரம் செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று சத்தியாகிரக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் என்று, எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.