2014-03-13 16:03:12

திருத்தந்தையைப் பற்றிய புதிய நூல் - "ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்"


மார்ச்,13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு பணிநிறைவையோட்டி, மார்ச் 12, இப்புதனன்று, வத்திக்கான் நூலகம் ஒரு புதிய நூலை வெளியிட்டுள்ளது.
"ஹலோ, நான் பிரான்சிஸ் பேசுகிறேன்: திருத்தந்தையும், ஓராண்டு தொடர்புகளில் புரட்சியும்" என்ற தலைப்பில், திருவாளர் Massimo Enrico Milone அவர்கள் எழுதியுள்ள இந்நூலில், திருத்தந்தையின் முக்கியமான படிப்பினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு, மார்ச் 16ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 6000க்கும் அதிகமான ஊடகத் துறையினரைச் சந்தித்த முதல் நிகழ்விலிருந்து, 2014ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று Corriere della Sera இதழுக்கு அவர் அளித்த பேட்டி வரையிலும், திருத்தந்தை வெளியிட்ட முக்கியமான கருத்துக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மக்களுடன் நேரடியாக, மிகவும் எளிய வழிகளில் தொடர்பு கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஓராண்டளவாய் ஊடகத்தைப் புரட்சிகரமான முறையில் பயன்படுத்தியுள்ள வழிகள், இந்நூலில் அலசப்பட்டுள்ளன என்று ஆசிரியர் Milone அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.