2014-03-13 16:05:02

அரசுத்தலைவருடன் கலந்து பேசத் தயார் - நிக்கராகுவா ஆயர் பேரவை


மார்ச்,13,2014. நிக்கராகுவா அரசுடன் அந்நாட்டு ஆயர் பேரவை உரையாடலையும், ஒத்துழைப்பையும் மேற்கொள்ள தயாராக உள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் René Sócrates Sándigo Jirón அவர்கள் கூறியுள்ளார்.
நிக்கராகுவா நாட்டின் உண்மை நிலையை ஆய்வு செய்து, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகுந்த தீர்வுகளைக் காண, நாட்டின் அரசுத்தலைவர் Daniel Ortega அவர்களுடன் கலந்து பேசத் தாங்கள் தயார் என்று ஆயர் Jirón அவர்கள் எடுத்துரைத்தார்.
அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உய்ரத்தப்பட்ட Leopoldo Brenes அவர்களுடன் நன்றித் திருப்பலி கொண்டாடிய அந்நாட்டு ஆயர்கள், இத்திங்கள் முதல் புதன் முடிய மேற்கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஆயர் Jirón அவர்கள், Fides செய்திக்குத் தெரிவித்துள்ளார்.
நாடு இன்று சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகளான, இளையோர் மத்தியில் பரவிவரும் போதைப்பொருள், சட்டங்களை மீறி நடத்தப்படும் சுரங்கத் தொழில், சிறைகளில் காணப்படும் பிரச்சனைகள் போன்ற கருத்துக்களை அரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொணர தாங்கள் முயன்று வருவதாக ஆயர் Jirón அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.