2014-03-12 15:56:45

மாதுளம் பழத்தைப் போன்று, ஒவ்வொரு மனிதரும் பல சாத்தியக் கூறுகளைத் தங்களுக்குள் தாங்கியுள்ளனர் - அருள்பணியாளர் தொனாத்திஸ் அவர்களின் தியான உரை


மார்ச்,12,2014. உயிர்தரும் பல விதைகளைத் தன்னுள் கொண்டுள்ள மாதுளம் பழத்தைப் போன்று, ஒவ்வொரு மனிதரும் பல சாத்தியக் கூறுகளைத் தங்களுக்குள் தாங்கியுள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு தியானம் வழங்கிவரும் அருள்பணியாளர் ஆஞ்செலொ தே தொனாத்திஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் திருப்பீட உயர் அதிகாரிகள் இணைந்து, தெய்வீக ஆசிரியர் இல்லத்தில் மேற்கொண்டு வரும் ஆண்டு தியானத்தின் மூன்றாம் நாள், இச்செவ்வாயன்று, படைப்பின் சிகரம் மனிதர்கள் என்றும், அவர்களுக்குள் பாவத்தின் ஈர்ப்புக்களும் உள்ளன என்றும் அருள்பணியாளர் தொனாத்திஸ் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
மாற்கு நற்செய்தி 5ம் பிரிவில், தீய ஆவி பிடித்த ஒருவரை இயேசு குணமாக்கும் நிகழ்வை மையப்படுத்தி, தன் கருத்துக்களை வழங்கிய அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள், அந்த மனிதரைக் காப்பதற்கு இயேசு 2000 பன்றிகளை கடலில் ஆழ்த்தியதை ஊர்மக்கள் விரும்பவில்லை என்பதையும் எடுத்துரைத்து, இவ்வுலகின் கணக்கில் பன்றிகள் மனிதர்களை விட மதிப்புப் பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார அடிப்படையில் இறைவனை மறந்து வாழும் இவ்வுலகின் மையத்திற்கு மீண்டும் இறைவனைக் கொணரும் மத நம்பிக்கையை ஊட்டுவது நம் முக்கியப் பணி என்றும் அருள் பணியாளர் தொனாத்திஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
திருத்தந்தையுடன் திருப்பீட அதிகாரிகள் 83 பேர் மேற்கொண்டுவரும் இந்த ஆண்டு தியானம் இவ்வெள்ளி மாலை நிறைவுபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.