2014-03-11 14:29:37

அரசியல்வாதிகள் போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்களா என்றறிய பரிசோதனை, ஆயர் ஆதரவு


மார்ச்,11,2014. அர்ஜென்டீனா நாட்டின் அரசியல்வாதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்களா என்று அறிவதற்கு அவர்கள் பரிசோதனைக்கு உட்பட வேண்டுமென்று அந்நாட்டு மேயர் ஒருவர் முன்வைத்துள்ள பரிந்துரையை வரவேற்றுள்ளார் ஆயர் ஒருவர்.
அர்ஜென்டீனா சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் போதைப்பொருள் பயன்பாடு பரவியுள்ளவேளை, அரசியல்வாதிகள் இப்பொருள்களைப் பயன்படுத்தாமல் உள்ளார்கள் என்பதை அறிவது, அந்த நபர்மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் உதவித் தலைவர் ஆயர் Virginio Domingo Bressanelli கருத்து தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டீனாவில் இளைய சமுதாயம் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாக, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் Bressanelli, இந்தக் குற்றத்திலிருந்து சிறாரையும், இளையோரையும் பாதுகாப்பதற்கு புதிய கொள்கைகள் வகுக்கப்படவேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
சில இளையோர் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதில்லை, அவர்களுக்கு குடும்ப ஆதரவு இல்லை, குடும்பம் இல்லை, அவர்கள் சரியாக உருவாக்கப்படவில்லை, அதனால் போதைப்பொருள்களில் எளிதாக மகிழ்ச்சியைத் தேடுகின்றனர் எனவும் ஆயர் Bressanelli கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.