2014-03-10 14:57:13

வாரம் ஓர் அலசல் – நற்பண்புகளை வளர்ப்போம்


மார்ச்,10,2014. RealAudioMP3 புனித ஜெரோம் பெத்லகேமில் துறவு மடம் கட்டி பல துறவிகளோடு வாழ்ந்து வந்த சமயத்தில் ஒருநாள் அவர் மற்ற துறவிகளுடன் சேர்ந்து ஒர் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திறந்திருந்த கதவு வழியாக, திடீரென ஒரு சிங்கம் அந்த அறைக்குள் நுழைந்தது. உடனடியாக அலறியடித்துக்கொண்டு துறவிகள் ஓடி ஒளிந்துகொண்டனர். ஆனால் ஜெரோம் மட்டும் தனது நாற்காலியில் அமைதியாக அமர்ந்துகொண்டு அந்தச் சிங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிங்கம் அவரை நோக்கி நொண்டி நொண்டி வந்து, முள் குத்தியிருந்த தனது பாதத்தைத் தூக்கிக் காட்டியது. வலியினால் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அந்தச் சிங்கத்தின் பாதத்தில் குத்தியிருந்த முள்ளை எடுத்து அந்தக் காயத்துக்கு மருந்து போட்டு வெண்ணீர் ஒத்தடம் கொடுத்து அதைக் குணமாக்கினார் ஜெரோம். சிறிது நாள்களில் அந்தக் காயம் ஆறியது. அதைச் சிங்கத்தின் முகத்திலும் காண முடிந்தது. அதன்பின்னர் சிங்கத்திடம் வாசலைக் காண்பித்துப் போகுமாறு சொன்னார் ஜெரோம். அதுவோ அவர் அருகிலேயே கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. இதற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டுமென நினைத்த அவர், மற்ற துறவிகளுடன் ஆலோசித்த பின்னர், அத்துறவு இல்லத்துக்கு விறகு கொண்டுவரும் கழுதைக்குக் காவல் பணி செய்யும் வேலையைக் கொடுத்தார். சிங்கமும் மகிழ்ச்சியோடு தினமும் கழுதைக்குப் பின்னே சென்று பாதுகாப்பாக அதை தினமும் இல்லத்தில் சேர்த்தது. ஒருநாள் கழுதை காட்டில் இருந்தபோது சிங்கம் அயர்ந்து தூங்கிவிட்டது. அவ்வழியே ஒட்டகங்களில் சென்ற வணிகர்கள் கழுதையைப் பிடித்துச் சென்றுவிட்டனர். பின்னர் விழித்துப் பார்த்த சிங்கம் அங்குமிங்கும் அலறியது. கழுதையைக் காணவில்லை. எனவே சோகமாக திரும்பி அத்துறவு இல்லத்துக்குச் செல்லாமல் கோவிலின் முன்பாகத் தங்கிவிட்டது. மற்ற துறவிகளோ, சிங்கம் பசியினால் கழுதையைக் கொன்று சாப்பிட்டிருக்கும் என்று கூறினர். ஆனால் ஜெரோம், அத்துறவிகளிடம், அவசரப்பட்டு தீர்ப்பிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். கழுதையைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்த சிங்கம், அந்த வணிகர்கள் அதே பாதையில் திரும்பி வந்தபோது தனது நண்பர் கழுதை அவர்களின் வாகனத்துக்கு முன்னால் செல்வதைக் கண்டு அந்த வணிகர்களைத் துரத்தியது. பயந்துபோன வணிகர்கள் அருகிலிருந்த துறவியர் இல்லம் வந்து ஜெரோம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். ஐயனே, எங்களை இந்தச் சிங்கத்திடமிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும், நாங்கள்தான் கழுதையைத் திருடினோம் என அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், தாங்கள் இந்தப் பக்கமாய் வரும்போதெல்லாம் உங்கள் இல்லத்துக்குத் தாராளமாக உதவி செய்வோம் எனவும் உறுதி கூறினர். பின்னர் அந்தச் சிங்கம் ஜெரோம் அருகில் வந்து கால் கைகளை நீட்டி, தான் செய்யாத குற்றத்துக்காக மன்னிப்பு வேண்டியது. அந்தச் சிங்கம் ஜெரோம் இறக்கும்வரை அவரைவிட்டு அகலவேயில்லை. அவரைக் கல்லறையில் வைத்தபோது அது கர்ச்சித்து அழுதது. புனித ஜெரோம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களில் இந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. புனித ஜெரோம் படங்களில் அவரருகில் ஒரு சிங்கம் இருப்பது இதனால்தான். புனித ஜெரோம், கி.பி.420ம் ஆண்டில் காலமானார்.
அன்பு நேயர்களே, “புனித ஜெரோமும் காயமடைந்த சிங்கமும்” என்ற இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது உங்களுக்குப் பலவிதமான சிந்தனைகள் உதித்திருக்கும். காட்டில் அனைத்து விலங்குகளையும் ஓடி ஒளிந்துகொள்ள வைக்கின்ற, பசி வந்தால் பாரபட்சமின்றி எல்லா உயிர்களையும் வீழ்த்திச் சாப்பிட்டு விடுகின்ற காட்டு அரசனுக்கு இத்தனை அடக்கமா? என்று நீங்கள் சிந்திக்கலாம். அன்பு நேயர்களே, சிங்கத்தைவிட்டுவிட்டு ஒரு நிமிடம் நம்மைப் பற்றிய சிந்தனைகளுக்கு வருவோம். காட்டில் நிமிர்ந்த நடையுடன் கம்பீரமாய் உலா வரும் சிங்கத்தின் குணங்கள் நம்மிடம் இல்லையா? நான்தான் வீட்டுக்கும் நாட்டுக்கும் ராஜா, ராணி என்ற பாணியில் இறுமாப்புடன், தான்தோன்றித்தனமாக நடப்பதில்லையா? நாம் கோபமாக இருக்கும்போது சிங்கம் போன்று கர்ச்சிப்பதில்லையா? நாம் இருக்கும் இடத்தையே நரகமாக்குவதில்லையா? வீட்டிலுள்ள சாமான்கள், சாப்பாட்டுத் தட்டுகள் எல்லாம் கண்ட கண்ட இடங்களுக்குப் பறப்பதில்லையா? உடன் இருப்போரை ஒடுக்குவதில்லையா? பார்க்கும் பார்வையோ சுட்டெரிப்பதுபோல் இருப்பதில்லையா? இப்படி நாம் நடந்து கொள்ளும்போது பிறரைக் காயப்படுத்துவதைவிட, பிறரை அச்சுறுத்துவதைவிட நம்மையே நாம் காயப்படுத்துகிறோம், தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம், நம்மில் குணமாகாத காயங்களை உண்டுபண்ணுகிறோம்.
இந்தியாவில் நடந்துவரும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல்வாதிகள் கர்ச்சித்து, எதிர்க்கட்சிகளைச் சாடி வருகின்றனர். தொண்டர்குடிமகன்களோ தலைவருக்காக தங்கள் சக்தியை விரயம் செய்து கத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நாள்களில் உக்ரைனின் கிரிமியா பகுதியில் நடந்துவரும் மோதல்களில் காட்டு அரசர்களின் குணங்கள் வெளிப்படுவதைக் காணமுடிகின்றது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்கு, பன்னாட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை குறித்து தான் கவலைப்படவில்லை என, இலங்கை அரசுத்தலைவர் ராஜபக்ஷே இஞ்ஞாயிறன்று தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் குத்திக்கொலைசெய்து தீயிட்டுக் கொளுத்தி அந்தத் தீயில் தானும் விழுந்து உயிரை மாய்த்திருக்கிறார் ஒரு மாணவர். சிறார் காப்பகங்களில் பாலியல் வன்முறை என்று, இஞ்ஞாயிறன்றுகூட ஒரு செய்தி. அன்புள்ளங்களே, மனிதர்களில்தான் எவ்வளவு சிங்கத்தின் குணங்கள். இதனால்தான் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது சோதனை நேரங்களில் சாத்தானோடு எவ்வித உரையாடலும் நடத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். இயேசு பாலைநிலத்தில் அலகையினால் சோதிக்கப்பட்டது பற்றி விளக்கியபோது, பாவ சோதனைகளோடு அல்லது இந்த உலகின் தருக்கமுறைகளோடு எவ்வித உடன்பாடும் கொள்ளவேண்டாம், தீய சக்திகள் மற்றும் இவ்வுலகப் பொருள்கள் கொடுக்கும் மயக்கத்தை நாம் புறக்கணிக்க வேண்டுமெனவும் திருத்தந்தை வலியுறுத்தினார். RealAudioMP3 அன்பர்களே, காயமடைந்த சிங்கத்துக்கு அதன் காயங்களைக் குணப்படுத்தி, முரட்டுத்தன்மையைப் போக்கி அதைப் பணிவுடன் நடக்க வைப்பதற்கு ஒரு ஜெரோம் கிடைத்தார். மற்ற துறவிகள் எல்லாம் பயந்து ஓடியபோது அந்தச் சிங்கத்தை இதமாகத் தடவிக்கொடுத்து அதன் காயங்களுக்கு மருந்துபோட்டுக் குணப்படுத்த புனித ஜெரோம் இருந்தார். நம்மிலுள்ள பிறர் பார்க்காத குணங்களைப் பார்த்து நம்மைத் தடவிக்கொடுத்து நம் மனக்காயங்களை ஆற்றி அரவணைக்க நமக்கும் அப்படியொரு புனிதர் கிடைத்தால் நாம் பேறுபெற்றவர்கள்தான். எத்தனையோ அறிவுரைகளைக் கேட்கிறோம், நல்ல நூல்களை வாசிக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னதுபோல கடவுளுடைய வார்த்தையை வழங்கும் விவிலியம் இருக்கின்றது. ஒவ்வொரு சமயத்திலும் நல்ல போதனைகள் இருக்கின்றன. சமய நூல்களை வாசித்து நம் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். பிறர் நம்மை வேதனைப்படுத்துவதைவிட முதலில் நம்மை நாமே வேதனைப்படுத்துகிறோம்; நமது துன்பங்கள் நம்மை வருத்துவதுமின்றி பிறரது கழுத்திலும் பெரிய பளுவை சுமத்துகின்றன; இந்த உண்மை நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அன்பர்களே, நமது அனுமதியின்றி நமது வாழ்வில் வேறு யாரும் நுழைய முடியாது.
நாம் மனத்தளவில் காயப்பட்டு வலி தாங்க முடியாமல் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தால், அந்தச் சிங்கம் போன்று துறவு மடங்களைத் தேடி தஞ்சம் புகவேண்டிய தேவையில்லை. நமது காயங்களைக் குணப்படுத்தும் புனித ஜெரோம்கள் நம் குடும்பங்களிலே இருக்கின்றனர். அருள்பணியாளர், அருள்சகோதரிகளுக்கு அவரவர் குழுக்களிலே இருக்கின்றனர். மாணவர்களுக்குப் பள்ளிகளிலே வழிகாட்டும் நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் உள்ளது. தவக்காலம், நோன்புக் காலங்கள் நம்மிலிருக்கும் சிங்கங்களை வெளியேற்றி பணிவுள்ள, புனித ஜெரோமின்சிங்கமாக மாறுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. விவிலியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்த இந்த புனித ஜெரோம் தன்னிலே கோபக்காரர். சுடுசொற்களைச் சொல்பவர். ஆனால் அவரும் தன்னைக் கட்டுப்படுத்தி புனிதர் ஆனார். மற்ற துறவிகள் அந்தச் சிங்கத்தைத் தவறாக எடைபோட்டபோது இப்புனிதர் நிதானமாகச் செயல்பட்டார்.
நம்மில் பலருக்கு நாம் சொல்வதே வேதம், நமக்குமேல் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் உண்டு. இந்திய ரூபாய்த் தாளிலுள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் கொடியைக் காணோம் என்பதை ஒரு சிறுவன்தான் கண்டுபிடித்துச் சொன்னதாகச் சொல்வார்கள். பல நேரங்களில் நாம் எழுதியது நம் கண்களுக்குச் சரியாகத்தான் தெரிகின்றது. ஆனால் அதை அடுத்தவர் வாசிக்கும்போதுதான் அதில் பிழைகள் இருப்பது தெரிய வருகின்றது. Thomas Jefferson அவர்கள் எழுதிய அமெரிக்க விடுதலை அறிக்கையை ஒரு குழு பரிசீலனை செய்தது. அக்குழுவின் பரிந்துரைகளைக் கேட்ட Jefferson கவலைப்பட்டார். அப்போது ஃபிராங்கிளின் அவர்கள், ஒரு கதை சொல்லி Jefferson அவர்களுக்குப் புரிய வைத்தார். ஒரு பெயர்ப்பலகையில், ஜான் தாம்சன் பெயருடன் தொப்பிப் படம் எப்படி வெளியானது என்பதை விளக்கி அவரின் கவலையை நீக்கினாராம் ஃபிராங்கிளின். “ஜான் தாம்சன் தொப்பி விற்பவர், தொப்பி செய்பவர், உடனடி பணத்திற்காகத் தொப்பிகளை விற்பார்” என்ற வாசகம்தான் முதலில் இருந்ததாம். பின்னர் ஒவ்வொருவரும் தெரிவித்த பரிந்துரையின்படி அது மாற்றப்பட்டதாம்.
நம் எல்லாரிடமும் நற்குணங்களும், தேவையற்ற குணங்களும் உள்ளன. எனவே ஒவ்வொருவரும் தன்னிலுள்ள தேவையற்ற, காட்டு ராஜா சிங்கங்களின் குணங்களை அகற்றி, புனித ஜெரோம் அவர்களிடம் பணிவுடன் நடந்துகொண்ட சிங்கத்தின் குணங்களை வளர்த்துக்கொள்வோம்.







All the contents on this site are copyrighted ©.