2014-03-10 16:40:37

மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றிருக்கிறோம் - Boston கர்தினால் O'Malley


மார்ச்,10,2014. மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் ஒரு திருத்தந்தையை நாம் பெற்றிருக்கிறோம், இத்தாலியைவிட்டு அதிகமாக வெளியே செல்லாமலேயே, இத்தாலிய மொழிதவிர வேறு மொழிகளில் மறையுரை வழங்காமலேயே அனைவரின் இதயங்களையும் தொட்டிருக்கும் ஒரு திருத்தந்தையை கடந்த ஓராண்டளவாக நாம் கண்டு வருகிறோம் என்று அமெரிக்கக் கர்தினால் Sean Patrick O'Malley அவர்கள் கூறியுள்ளார்.
ஒரு திருத்தந்தையின் தினசரி திருப்பலி மறையுரைகள் இவ்வளவு ஆர்வமாக, எண்ணற்ற மக்களால் பின்பற்றப்படுவதை இதுவரை தன் வாழ்வில் கண்டதில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஓராண்டு தலைமைப் பொறுப்புப் பணிகள் குறித்து பேட்டியளித்த அமெரிக்காவின் Boston கர்தினால் O'Malley அவர்கள் கூறினார்.
ஒரு திருத்தந்தை, வெளிநாட்டிற்குத் திருப்பயணங்கள் மேற்கொள்வதன் வழியாகவும், பல மொழிகளைத் தெரிந்திருப்பதன் வழியாகவுமே தன் கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் எடுத்துரைக்க முடியும் என்ற நிலை, தற்போது மாறிவருகிறது என்றும் கர்தினால் O'Malley அவர்கள் எடுத்துரைத்தார்.
சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களை நாம்தான் தேடிச்சென்று பணியாற்றவேண்டும், திருஅவைக்குள் அவர்களை அழைத்துவரவேண்டும் என்ற இயேசுவின் விருப்பத்திற்கு ஏற்ப, காணாமற்போன ஓர் ஆட்டைத் தேடும் பணியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை பணி அமைந்துள்ளது என்றும் கர்தினால் O'Malley அவர்கள் கூறினார்.
திருத்தந்தையர் வழக்கமாகத் தங்கும் இல்லம் செல்வச்செழிப்புடையது என்பதற்காக அதில் தாங்காமல், சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கவில்லை என்பதைக் கூறிய கர்தினால் O'Malley அவர்கள், தான் தனித்து வாழ்வதை அவர் விரும்பவில்லை என்பதே திருத்தந்தையின் இந்த முடிவுக்குக் காரணம் என்பதையும் விளக்கினார்.

ஆதாரம் : Catholic Online








All the contents on this site are copyrighted ©.