2014-03-10 16:13:19

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


மார்ச்,10,2014. சாத்தானால் நாம் சோதனைக்கு உள்ளாகும்போது அதனோடு உரையாடலில் ஈடுபடாமல், இறைவார்த்தையின் வல்லமை கொண்டு அதனை எதிர்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறான இம்மாதம் 9ம் தேதி, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்வை எடுத்துரைத்து, இயேசுவைப்போல் நாமும் இறைவார்த்தையின் வல்லமை கொண்டு சாத்தானை எதிர்கொள்ளவேண்டுமேயொழிய, அதனோடு ஏவாளைப்போல் உரையாடல் நடத்தக்கூடாது என்றார்.
சாத்தானையும் அதன் செயல்பாடுகளையும் ஒதுக்குவதாக திருமுழுக்கின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இயைந்தவகையில் நம் பயணத்தைத் துவக்க, தவக்காலம் ஒரு சிறந்த நேரம் எனவும் கூறினார் திருத்தந்தை.
இயேசு திருமுழுக்குப் பெற்றபின் பலைவனத்தில், தியாகப்பாதையை கைவிட்டு எளிதான பாதையைக் கைக்கொள்ளும்படி சாத்தானால் சோதிக்கப்பட்டு மூன்று பாதைகள் முன்வைக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சாத்தானுடன் உரையாடலை மேற்கொள்ள விரும்பாத இயேசு, இறைவார்த்தையின் வல்லமைகொண்டு அதனை எதிர்கொண்டார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.