2014-03-10 16:45:35

அகில உலகக் குடும்பங்கள் மாநாட்டை ஏற்பாடு செய்யும் உயர்மட்டக் குழு வத்திக்கானுக்கு வருகை


மார்ச்,10,2014. 2015ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் பிலடெல்பியா மாநகரில் நடைபெறவிருக்கும் அகில உலகக் குடும்பங்கள் மாநாட்டை ஏற்பாடு செய்யும் உயர்மட்டக் குழுவொன்று, இம்மாதம் 24 முதல் 26 முடிய வத்திக்கானுக்கு வருகை தரும் என்று பிலடெல்பியா உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
பிலடெல்பியா பேராயர் Charles Chaput அவர்களின் தலைமையில் சில அரசு அதிகாரிகளுடன் வத்திக்கானுக்கு வருகை தரும் இக்குழுவினர், திருப்பீடக் குடும்பப்பணி அவையின் தலைவர், பேராயர் Vincenzo Paglia அவர்களை மார்ச் 25ம் தேதியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, 26ம் தேதியும் சந்திப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் 27 முடிய நடைபெறவுள்ள இந்த அகில உலக மாநாட்டின் இறுதிநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற சிறப்பு அழைப்பை தான் தனிப்பட்ட முறையில் விடுக்க விரும்புவதாக, பிலடெல்பியா மாநகர மேயர், Michael Nutter அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அகில உலகக் குடும்பங்கள் மாநாட்டில் முன்னாள் திருத்தந்தையர் கலந்துகொண்டுள்ளனர் என்றும், இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும் CNS செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அகில உலக குடும்பங்கள் மாநாட்டின் இறுதிக் கூட்டம், 2012ம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றபோது, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.