2014-03-08 15:28:37

உலகில் 10 பெண்களுக்கு ஒருவர் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்


மார்ச்,08,2014. உலகில் உள்ள பெண்களில், 10 பேரில் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், அவர்களில் பாதிப்பேர் மட்டுமே புகார் அளிப்பதாகவும், ஐரோப்பிய சமுதாய அவை நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி 15 முதல் 74 வயது வரையுள்ள 42 ஆயிரம் மகளிரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தப் புள்ளி விபரங்கள் தெரியவந்துள்ளன.
பதினைந்து வயதிற்குக் கீழுள்ள சிறுமிகளில் இருபது பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவர்களில் 12 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் பாதிக்கப்பட்டதைத் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஐரோப்பிய சமுதாய அவையைச் சேர்ந்த 28 நாடுகளில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான மகளிர் பல வகையான பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், இந்நாடுகளில் மட்டும் 90 இலட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : செய்தி நிறுவனங்கள்







All the contents on this site are copyrighted ©.