2014-03-06 16:04:11

பெண்களுக்கென காரித்தாஸ் அமைப்பு நிறுவியுள்ள சிறப்பு விருது


மார்ச்,06,2014. உலகின் பசியைத் தீர்ப்பதில் பெண்கள் ஆற்றும் பங்கினை, குறிப்பாக, வேளாண்மை வழியே அவர்கள் தரும் தீர்வை உலகறியச் செய்வதற்கு, காரித்தாஸ் அமைப்பு, பெண்களுக்கென ஒரு சிறப்பு விருதை நிறுவ உள்ளது என்று அகில உலகக் காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரிகுவாஸ் மரதியாகா அவர்கள் கூறினார்.
உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பெண்கள் ஆற்றும் பங்கினைப் பாராட்டும் வகையில், Women Sowers of Development Prize என்ற ஒரு சிறப்பு விருதை அகில உலகக் காரித்தாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Fidel Götz என்ற அறக்கட்டளையுடன் இணைந்து, அகில உலகக் காரித்தாஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த விருது, மார்ச் 8ம் தேதி, இச்சனிக்கிழமை கொண்டாடப்படும் அகில உலக மகளில் நாளன்று, உரோம் நகரில் நிகழவிருக்கும் Voices of Faith என்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
10,000 யூரோக்கள் மதிப்புள்ள இரு விருதுகளைப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெண்கள் தெரிவு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் 16ம் தேதி, அகில உலக உணவு நாளன்று, அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உருவாக்கப்படும் உணவில் 50 விழுக்காடு பெண்களின் முயற்சியால் உருவாகிறது என்றாலும், நில உரிமை என்ற கோணத்தில், உலகில் உள்ள நிலங்களில் 2 விழுக்காடு நிலங்களுக்கே பெண்கள் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் நில உரிமை வழங்கப்பட்டால், உலக உணவு உற்பத்தி, குறைந்தது 30 விழுக்காடு உயரும் என்றும், இதனால், இன்னும் 15 கோடி மக்களுடைய பசி தீர்க்கப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.