2014-03-06 16:03:14

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனித பூமி பயணம், சமாதானத்தை உருவாக்க புதியதோர் உந்து சக்தியாக அமையும் - எருசலேம் முதுபெரும் தந்தை


மார்ச்,06,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொள்ளும் பயணம், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இருநாட்டு மக்களிடையே சமாதானத்தை உருவாக்க புதியதோர் உந்து சக்தியாக அமையும் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
மேமாத இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை மையக் கருத்தாகக் கொண்டு, தவக்கால மேய்ப்புப்பணி மடலை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை Twal அவர்கள், செபம், உண்ணாநோன்பு, தர்மம் ஆகிய பாரம்பரியத் தவக்கால முயற்சிகள் குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜோர்டன், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இப்பயணத்தின்போது, அம்மான் விளையாட்டுத் திடலிலும், பெத்லகேம் திறந்தவெளி அரங்கிலும் மே 24, 25 ஆகிய தேதிகளில் திருத்தந்தை ஆற்றும் திருப்பலிகளில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு, முதுபெரும் தந்தை Twal அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணத்தை முன்னறிவிக்கும் வகையில், 1964ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் புனித பூமியில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியொன்று எருசலேம், புனித இரட்சகர் அருள் சகோதரிகள் இல்லத்தில், இவ்வியாழனன்று துவங்கியுள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.