2014-03-06 16:00:47

திருத்தந்தை பிரான்சிஸ் : தவக்காலத்தின் துவக்கத்தில் அருள்பணியாளர்கள் அனைவரும் கருணையைப்பற்றி தியானிப்பது பயனளிக்கும்


மார்ச்,06,2014. அருள்பணியாளர்கள் என்ற முறையில், தவக்காலத்தின் துவக்கத்தில் நாம் அனைவரும், கருணையைப்பற்றி தியானிப்பது பயனளிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் மறைமாவட்டத்தில் பங்குத் தளங்களில் பணியாற்றும் அருள்பணியாளர்களை இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணையைப் பற்றி நாம் அனைவரும் இணைந்து தியானிப்போம் என்று தன் உரையைத் துவக்கினார்.
திருஅவைக்கு இது கருணையின் காலம், அருள்பணியாளருக்கு கருணை என்பதன் பொருள் என்ன?, ஒப்புரவு அருள் சாதனத்தில் கருணையின் பங்கு என்ற மூன்று கருத்துக்களில் திருத்தந்தை தன் உரையை வழங்கினார்.
இறைவனின் கருணை என்ற கண்ணோட்டத்திலிருந்து மக்களைக் காணும் பார்வையை, திருஅவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; கருணை நிறைந்த செயல்கள், ஒப்புரவு அருள் சாதனம் ஆகியவை வழியாக திருஅவை இறைவனின் கருணையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதை, தன் முதல் எண்ணமாகப் பகிர்ந்தார் திருத்தந்தை.
களைப்புற்ற ஆடுகள் மேல் பரிவுகொண்டு அவற்றைச் சுமக்கவும், வழிநடத்தவும் தயங்காத நல்லாயனைப்போல, அருள்பணியாளர்கள், களைப்புற்றுவரும் மனிதரை, கருணையோடு அணைத்துக்கொள்ள, குறிப்பாக, ஒப்புரவு அருள்சாதனம் வழியே அவர்களை ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்பது திருத்தந்தை பகிர்ந்த 2வது எண்ணமாக இருந்தது.
ஒப்புரவு அருள் சாதனத்தை வழங்கும் அருள்பணியாளர்கள், பாவத்தின் தீவிர விளைவுகளைச் சிறுமைப்படுத்தாமல், அதே நேரம், பாவிகளைக் கருணையுடன் அரவணைக்கும் மனநிலையுடன் இவ்வருள்சாதனத்தை வழங்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 3வது எண்ணமாக முன்வைத்தார்.
பங்குத்தளங்களில் அருள்பணியாளர்களின் ஒவ்வொரு நாள் வாழ்வும் எவ்விதம் துவங்குகிறது, எவ்விதம் முடிகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்வது, தவக்காலத்தில் மிகவும் முக்கியமான பணி என்பதையும், தன் உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.