2014-03-06 16:01:25

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனை மீண்டும் வாழ்வின் மையத்திற்குக் கொணர தவக்காலம் உதவுகிறது


மார்ச்,06,2014. நாம் ஏன் இறைவனிடம் திரும்பிச் செல்லவேண்டும்? ஏனெனில், நமக்குள், நாம் வாழும் உலகில், நமது சமுதாயத்தில், திருஅவையில் அனைத்தும் நலமாக இல்லாததால், மாற்றங்களைத் தேடி, மனமாற்றங்களைத் தேடி நாம் இறைவனிடம் திரும்பவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருநீற்றுப் புதனன்று மாலை 5 மணியளவில், உரோம் நகர், புனித சபீனா பேராலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்போது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பயனுள்ள வகையில் உற்பத்தியைப் பெருக்குவது ஒன்றே முக்கியம் என்பதை முன்னிறுத்தும் இவ்வுலகில், கடவுள் ஒதுக்கப்படுகிறார் என்றும், மீண்டும் அவரை வாழ்வின் மையத்திற்குக் கொணர தவக்காலம் உதவுகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
செபம், உண்ணாநோன்பு, தர்மம் என்ற மூன்று எண்ணங்களை, தன் மறையுரையில் விளக்கியத் திருத்தந்தை, நம்முடையத் தேவைகளுக்காக மட்டுமல்ல, துயருறும் மக்கள் அனைவரின் தேவைகளுக்காகவும் சிறப்பான செபங்களை எழுப்புவது, தவக்காலத்தின் முக்கிய முயற்சி என்று கூறினார்.
உணவைக் குறைப்பது, நம் உடல் நலனைக் கூட்டும் என்ற மனநிலையுடன் மேற்கொள்ளப்படும் உண்ணாநோன்பு, தவ முயற்சி அல்ல, மாறாக, அடிப்படைத் தேவைகளுடன் வாழப்பழகுவது, அடுத்தவரோடு பகிர்ந்துகொள்வது என்பவையும், உண்ணாநோன்பில் அடங்கியுள்ள அம்சங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
உலகில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும், பதிலுக்கு எதையோ எதிர்பார்த்து செய்யப்படுகின்றது என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதையும் எதிர்பாராமல் அடுத்தவருக்கு வழங்குவதே உண்மையான தர்மம் என்று தன் மறையுரையில் விளக்கினார்.
நமக்குள்ளும், நம்மைச் சுற்றிலும் மீண்டும் புதியனவற்றை உருவாக்க நமக்குத் தரப்பட்டுள்ள தவக்காலத்தில், நம்மை முற்றிலும் மன்னித்து, மீண்டும் ஒருமுறை நாம் வாழ்வைப் புதுப்பிக்க இறைவன் நம்மைத் தூண்டுகிறார், எனவே, அவரை நோக்கி நாம் பயணத்தைத் துவக்குவோம் என்ற எண்ணத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருநீற்றுப் புதன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.