2014-03-05 16:08:18

கர்தினால் தாக்லே - சொந்த நலனை மட்டும் கருதி ஒருவர் மேற்கொள்ளும் தவ முயற்சிகள் வெளிவேடமாக அமையும்


மார்ச்,05,2014. இறைவனையும், அடுத்தவரையும் குறித்த எண்ணங்கள் ஏதுமின்றி, தங்கள் சொந்த நலனை மட்டும் கருதி ஒருவர் மேற்கொள்ளும் தவ முயற்சிகள் வெளிவேடமாக அமையும் என்று ஆசியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருநீற்றுப் புதனன்று மறையுரையாற்றிய மணிலாப் பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், கடவுளிடமும், அடுத்தவரிடமும் நம்மை அழைத்துச் செல்லாத தவமுயற்சிகள் வீணானவை என்று எடுத்துரைத்தார்.
மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக தர்மம் செய்யும் அரசியல் வாதிகளைப் போல, தவக்காலத்தில் நாம் தர்மங்கள் செய்வதும், தங்கள் எடையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஒருவர் தவக்காலத்தில் மேற்கொள்ளும் உண்ணா நோன்பும் வெளிவேடங்கள் என்று கர்தினால் தாக்லே அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஹையான் சூறாவளியாலும், நிலநடக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பின்ஸ் மக்களுக்கு உதவிகள் செய்யும் நோக்கத்தோடு ஒருவர் மேற்கொள்ளும் தியாகங்கள் அர்த்தமுள்ளவை என்பதையும் கர்தினால் தாக்லே அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
மேலும், தவக்காலத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், பிலிப்பின்ஸ் நாட்டில் 20 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையை, தன் செய்தியில் சுட்டிக்காடியுள்ளார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.