2014-03-05 13:37:02

அமைதி ஆர்வலர்கள் – 1909ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


மார்ச்,05,2014. Auguste Beernaert, Paul Henri d'Estournelles de Constant ஆகிய இருவரும் 1909ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்றனர். Auguste Marie François Beernaert, பெல்ஜியம் நாட்டின் Ostendல் 1829ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி ஒரு நடுத்தரவர்க்க கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பணி காரணமாக இவரது குடும்பம் அடிக்கடி இடமாற்றம் செய்தது. மிகவும் அறிவாளியான மற்றும் நன்னடத்தையில் சிறந்தவரான இவரது தாய், இவரையும், இவரது சகோதரியையும் நன்றாக வளர்த்தார். 1851ம் ஆண்டில் லுவெய்ன் பல்கலைக்கழகத்தில் மிக உயரிய மதிப்பெண்களுடன் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற Beernaert, இதன் காரணமாக கல்வித்துறையில் சலுகைகள் பெற்று பாரிஸ், பெர்லின் என சில சிறந்த பல்கலைக்கழகங்களில் சட்டக்கல்வியை மேலும் கற்றார். 1853ம் ஆண்டில் பெல்ஜியம் திரும்பி வழக்கறிஞர் கழகத்தில் உறுப்பினரானார். அடுத்த இருபது ஆண்டுகளில் இவர் சட்ட இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இவருக்குப் புகழைத் தேடித்தந்தன. 1873ம் ஆண்டில் வழக்கறிஞர் தொழிலைவிட்டு பெல்ஜிய கத்தோலிக்கக் கட்சியில் சேர்ந்தார். 1884ம் ஆண்டில் புதிய அமைச்சரவையில் வேளாண்துறை, தொழிற்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறையின் அமைச்சரானார் Beernaert. சில மாதங்கள் கழித்து அந்த அமைச்சரவையில் சிலர் பதவி விலகியதால் அரசை நடத்தும் பொறுப்பை Beernaertடம் ஒப்படைத்தார் அரசர் 2ம் லியோபோல்டு.
Auguste Beernaert, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, பெல்ஜியத்தின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் பணி செய்தார். இவருடைய ஆட்சியில் அரசின் வரவுசெலவு சமநிலைக்கு வந்தது. பிளமிஷ் மொழி பாதுகாக்கப்பட்டது. 1885ம் ஆண்டில் காங்கோ தனிநாடு உருவாக்கப்பட்டது. இந்த நாட்டின் வளர்ச்சியில் அதிகம் பங்கேற்ற லியோபோல்டிடம் அந்நாட்டின் இறையாண்மை ஒப்படைக்கப்பட்டது. பெல்ஜியத்தில் தொழிலாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்கென, சமூக மற்றும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசியல் அமைப்பு சீர்செய்யப்பட்டது. இதன்மூலம் குடிமக்கள் முன்னர் அனுபவித்த உரிமைகளைவிட பத்துமடங்கு உரிமைகளை அதிகம் அனுபவித்தனர். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்பட்ட செயல்களில் Beernaertம் தீவிரமாக ஈடுபட்டார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நாடுகளின் பாராளுமன்றங்கள் கழகத்தில் உயிர்த்துடிப்புள்ள உறுப்பினரானார். அதன் பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டார். 1899ம் ஆண்டில் Hagueல் நடந்த அமைதிக் கருத்தரங்கில், ஆயுதக்கட்டுப்பாடு குறித்த முதல் அவைக்கும், 1907ம் ஆண்டில் நடந்த சண்டை ஒழிப்பு குறித்த 2வது அவைக்கும் இவர் தலைமை தாங்கினார். போர் ஒழிப்பு நீதிமன்றத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார் Beernaert. இவர், 1902ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே இடம்பெற்ற பிரச்சனையில் மெக்சிகோ சார்பாக வாதாடினார். அனைத்துலக கடல்சார்ந்த சட்டத்தை ஒன்றிணைப்பது குறித்த பரிந்துரைகளில் முக்கிய தூண்டுகோலாகச் செயல்பட்டவர் Beernaert. இவர் அரசியலிலும், அனைத்துலக அமைதிப்பணியிலும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி 1909ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. விமானப்படைத் தாக்குதலைத் தவிர்க்கும் ஜெனீவா கருத்தரங்கில் 1912ம் ஆண்டில் கலந்துகொண்டபோது நிமோனியா காய்ச்சலால் காலமானார் Auguste Beernaert.
1909ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற மற்றொருவரான Paul Henri d'Estournelles de Constant சிலுவைப்போர் வீரர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த d'Estournelles, 1876ம் ஆண்டில் அரசின் தூதரகப் பணியில் சேர்ந்தார். 1895ம் ஆண்டு மே 19ம் தேதி அரசியலில் சேர்ந்து, 1924ம் ஆண்டில் அவர் இறக்கும்வரை முற்போக்கு பொதுவுடமைவாதியாகத் துடிப்புடன் செயல்பட்டார். 1899ம் ஆண்டில் Hague அமைதிக் கருத்தரங்குக்கு, ப்ரெஞ்ச் பிரதிநிதியாகச் சென்றார். அதுமுதல் ஏறக்குறைய தனது வாழ்நாள் முழுவதும் அமைதிக்கும், போர் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குமென அரும்பாடுபட்டார். இந்த அமைதிக் கருத்தரங்கில் போர் ஒழிப்பு உடன்பாடு ஏற்படுவதற்கு கடுமையாக உழைத்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், மெக்சிகோவுக்கும் இடையே இடம்பெற்ற பிரச்சனை Hague நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்க அரசுத்தலைவர் தியோடர் ரூஸ்வெல்ட்டை ஏற்க வைத்தவர் d'Estournelles எனச் சொல்லலாம். மியுனிச் நகருக்கு இவர் மேற்கொண்ட பயணத்தால், பிரான்ஸ்-ஜெர்மனி கழகம் 1903ம் ஆண்டில் உருவானது. இவர் தலைமையில் இலண்டன் சென்ற குழுவின் முயற்சியினால் பிரான்சும் பிரித்தானியாவும் 1904ம் ஆண்டில் நல்லிணக்கத்துக்கு வந்தது. 1905ம் ஆண்டில் பாரிசில் அனைத்துலக ஒப்புரவு கழகத்தை நிறுவினார். ஐரோப்பிய பிரச்சனைகளுக்கு இவர் முன்வைத்த தீர்வே ஐரோப்பிய ஒன்றியம் உருவாகக் காரணமானது. முதல் உலகப்போரின்போது பிரான்சின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இவ்வாறு பல வழிகளில் உலக அமைதிக்கு உழைத்தவர் Paul Henri d'Estournelles. தனது வாழ்நாள் முழுவதும் சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவுமாக விளங்கிய d'Estournelles, 1924ம் ஆண்டில் தனது 72வது வயதில் பாரிசில் காலமானார்.
நாம் ஒருவருக்கொருவர் கடமைப்பட்டவர்கள், நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்கள் என்பதை மறப்பதாலேயே நம்மிடம் அமைதி இல்லாமல் போகிறது என்று சொன்னவர் முத்திப்பேறுபெற்ற அன்னை தெரேசா.








All the contents on this site are copyrighted ©.