2014-03-04 15:36:24

புதிய பொருளாதாரச் செயலகத்தின் பொதுச் செயலர் பேரருள்திரு Alfred Xuereb


மார்ச்,04,2014. திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாட்டின் அனைத்துப் பொருளாதார மற்றும் நிதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரச் செயலகத்தின் பொதுச் செயலராக, பேரருள்திரு Alfred Xuereb அவர்களை இத்திங்களன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மால்ட்டா நாட்டவரான பேரருள்திரு Alfred Xuereb அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயலராவார். 55 வயதாகும் இவர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். வத்திக்கான் வங்கி எனப்படும் திருஅவையின் சமயப் பணிகள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் அதன் பணிகளை மறுபரிசீலனை செய்யும் குழுக்களுக்குத் தனது பிரதிநிதியாக, கடந்த நவம்பரில் பேரருள்திரு Alfred Xuereb அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருப்பீடம் மற்றும் திருஅவையின் நிர்வாகச் சீர்திருத்தப்பணியில் தனக்கு ஆலோசனை அளிக்கும் எட்டு கர்தினால்கள் கொண்ட குழுவுடன் கூட்டம் நடத்திய பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி, புதிய பொருளாதாரச் செயலகத்தை உருவாக்கி, அதன் தலைவராக ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்களை நியமித்தார்.
நம்பிக்கைக்கு உரியவரும், அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர்(Fidelis dispensator et prudens லூக்.12,42) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்ட தனது சொந்த முயற்சியினால்(Motu proprio) என்ற அறிக்கையில் இந்தப் புதிய பொருளாதாரச் செயலகம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.