2014-03-04 15:36:31

சமய சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு கர்தினால் டர்க்சன் வலியுறுத்தல்


மார்ச்,04,2014. ஒவ்வொரு மனிதரும் உண்மையைப் பற்றிய தனது புரிந்துகொள்ளுதலுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைப்பதற்கு உதவும் சமய சுதந்திரத்தைப் பேணி பாதுகாப்பது இன்றியமையாதது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சுலோவாக்கிய நாட்டின் பிராட்டிஸ்லாவாவில், “திருஅவையும் மனித உரிமைகளும்” என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில், அந்நாட்டு ஆயர்களின் அழைப்பின்பேரில் பங்குகொள்ளும் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், சமய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.
கருத்துச் சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம் ஆகிய இரண்டிலுமிருந்து சமய சுதந்திரத்தைப் பிரிக்க முடியாது என்று இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன், சமய சுதந்திரம் என்பது, ஒவ்வொருவரும் தனியாகவோ அல்லது சமூகமாகவோ தங்களின் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும் என்றும் கூறினார்.
சமய சுதந்திரம் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படுவதில்லை என்றும், இக்காலத்தில் அதிகமான நாடுகளில் தங்கள் விசுவாசத்துக்காகத் துன்புறுவோர் கிறிஸ்தவர்களே என்றும், இது மனித உரிமைகளை மிகப்பெரிய அளவில் மீறுவதாக உள்ளது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.